பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 05.07.2024 வெள்ளிக்கிழமை பொபினிப் பகுதியில் பிற்பகல் 15.30 மணிக்கு உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை செயற்பாட்டாளர் திரு.தேவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச் சுடரினை லெப்.கேணல் அன்பு (அம்மா) அவர்களின் சகோதரர்
ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
2007 இல் சர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தென்னவன் அவர்களின் சகோதரர் மலர்மாலை அணிவித்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; அணிவகுத்து சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
செல் தமிழ்ச்சோலை, லாக்கூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவுசுமந்த எழுச்சி நடனம் மற்றும்
தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவு சுமந்த கவிதைகள் சிறப்பாக அமைந்திருந்தன.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவு சுமந்த எழுச்சிகானங்கள் நிகழ்வை மேலும் உணர்வூட்டிச் சிறப்பித்திருந்தன.
தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகளை நினைவேந்தி தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக மாணவர்கள் தமது கருத்துரைகளை சிறப்பாக வழங்கியிருந்தனர்.
ஞானவிக்கினா வினுசா, மகேந்திரன் நிலுக்சிகா, கண்ணன் ஜீவந்தனா ஆகிய பட்டக மாணவர்கள் தமிழ்,பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் தமது உரைகளை வழங்கியிருந்தனர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உரையாற்றிய முக்கிய செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் தமிழீழ தேச தடைநீக்கிகளின் தியாகங்களை நினைவுபடுத்தியிருந்ததுடன், இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் சிறார்களுக்கு தமிழீழ தேச தடைநீக்கிகளின் வரலாறுகள் பற்றி குறிப்பிடவேண்டும் என்பதாக அவரின் உரை தொடர்ந்தது.
சிறப்புரையை கடற்புலிகளின் சார்பில் இன்பன் அவர்கள் ஆற்றியிருந்தார். , தமிழீழ தேச தடைநீக்கிகளின் ஈகம் பற்றி அனைவரையும் சிந்திக்க வைப்பதாக அவருடைய உரை அமைந்திருந்தது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)