பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.


கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சு பாரிசு நகரின் புறநகர் பகுதி 93 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள நுவாசி லு செக் என்னும் நகரத்தில் பிராங்கோ தமிழ்சங்கம் அங்குவாழும் தமிழ் உணவாளர்களால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. அன்று முதல் இன்று வரை 120 வரையிலான மாணவர்களை தன்னகத்தே கொண்டு பெரும் பணியை தமிழ்ச்சோலை செய்துவருகின்றது. பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசிலு செக்கின் மாநகர சபையுடன் கொண்ட நல்ல நட்பின் செயற்பாட்டால் அம்மாநகர முதல்வர் முதற்கொண்டு அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

கடந்த 16 ஆம் நாள் நடைபெற்ற 5 ஆவது ஆண்டு விழாவானது தமிழ்ச்சங்கம், தமிழ்ச்சோலை மாணவர்கள், அவ் மாநகர மக்கள் ஏனைய 93 மாவட்ட பிராங்கோ தமிழ்ச்சங்க தலைவர்கள் உறுப்பினர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரதிநிதிகள், தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருந்தினர் பறைஇசையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கள விளக்கேற்றல், தமிழ்ச்சோலைக்கீதம், பேச்சு , வரவேற்பு நடனம், வரவேற்புரை எனவும் மாணவர்களின் ஆக்கங்கள் கவிதை பேச்சு, ஆங்கில நாடகம், சமூக நாடகம், என நிகழ்வுகள் யாவும் தமிழ்ச்சோலையின் கல்விஉயர்வை இயம்பியிருந்தன. நிகழ்வில் மாநகர முதல்வர், கலைகலாசார பொறுப்பாளர் மற்றும் பல முக்கியமானவர்கள் கலந்து கொண்டதோடு உரைகளையும் ஆற்றியிருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியக பொறுப்பாளர்கள், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர், உறுப்பினர்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் சங்கத்தலைவர், சங்க உறுப்பினர்களுக்குமான தகைசார் விருது வழங்கி மதிப்பளிப்பு செய்துவைத்திருந்தனர். பரப்புரைப்பொறுப்பாளர் அவர்களும் மதிப்பளிப்பினைசெய்துவைத்து சிறப்புரையை ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில், நுவாசி லு தமிழ்ச்சங்கத்தின் குறுகியகால உருவாக்கத்தில் ஏனைய பிராங்கோ தமிழ்சங்கங்களில் இல்லாத செயற்பாட்டை பார்க்கக்கூடியதாக இருப்பதையும், தமிழர்களின் தேசிய நிகழ்வான மாவீரர்நாளிலும், மே 18 நாளிலும் மாநகரமுதல்வரின் நேரடிப்பங்களிப்பையும், எமக்காக வலுவான குரலை அரசியல் ரீதியில் தருவதையும் அதற்கு என்றும் இங்குவாழ் தமிழ்மக்கள், இவர்கள் போன்றவர்களின் கரங்களையும் வலுப்படுத்தவேண்டும். தற்பொழுது தேர்தல் காலம் என்பதையும் வாக்களிக்கும் உரிமம் பெற்ற அனைத்துத் தமிழ்மக்களும் சனநாயக உரிமையான சுதந்திரமான தங்களின் வாக்குகளை நிச்சயம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சிறப்பாக இரவு 10.00 மணிவரை மாணவர்கள் உற்சாகமாக ஆண்டுவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.




















