இனவாத அரசியலை விடவும் தேசிய அரசியலையே நான் விரும்புகிறேன். இனவாதம் இருக்குமிடத்தில் எனக்கு வேலையில்லை என தெரிவித்த முன்னாள் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைவிடவும்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறந்தவர். அடுத்த வாரம் நல்லாட்சிக்கான வரவு உருவாகுமென்ற நம்பிக்கையிலேயே வெளியேறுவதாகவும் காரணம் காட்டினார்.
அரசாங்கத்தின் உறுப்பினர்களாக செயற்பட்டு வந்த முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று பொது எதிரணியுடன் இணைந்து கொண்டார். இது தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது. அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நாடு நல்லதொரு நிலையில் உள்ளது. நான் கடந்த 9 ஆண்டுகள் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி வந்துள்ளேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுடன் மிக நெருங்கிய உறவினையும் நம்பிக்கையினையும் பெற்றவன் நான். எனினும் அரசாங்கத்துடன் நம்பிக்கையாக செயற்படுவதை விடவும் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகின்றேன். யுத்தத்தினை வென்றெடுத்த நாட்டில் நல்லாட்சியினை வென்றெடுக்க வேண்டும் மூவின மக்களின் உரிமைகளுக்கும் சம அந்தஸ்த்து கொடுக்கப்பட வேண்டும்.
எனது வாழ்க்கையில் கடினமான முடிவு அதற்கமைவாகவே நான் தற்போது எனது மனச்சாட்சிக்கு அமைவாக முடிவெடுத்துள்ளேன். எனவே வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணமே தற்போது நான் சந்திக்கின்றேன். நம்பிக்கையானவரிடமிருந்து பிரிய வேண்டிய தருணம் அரசாங்கம் தனிப்பட்ட வகையில் பல நல்ல விடயங்களை எனக்கு பெற்றுக் கொடுத்திருந்த போதிலும் எமது மக்களுக்கு பாதகமான வகையிலேயே தனது முடிவுகளை எடுத்திருந்தது. நான் அரசாங்கத்தை விட்டு வெளியேற ஆரம்பத்திலேயே திட்டமிட்டிருந்தேன். குறிப்பாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விட்டு வெளியேறியவுடன் நானும் வெளியேற ஆசைப்பட்டேன். எனினும் ஜனாதிபதி என் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும் நட்புமே என்னை தடுத்து விட்டது. எனினும் தற்போதேனும் நான் சுயநலத்திற்கப்பால் நாட்டின் நன்மைக்காக சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் அனைவரும் ஒரு நாட்டு மக்களாய் ஒன்றிணைந்து வாழ வேண்டும். இன முரண்பாடுகளுக்கு அப்பால் இன ஒற்றுமையினையும் வளர்க்க வேண்டும். அதற்காகவே நான் மிகவும் சிரமத்தின் மத்தியில் எனது முடிவினை தீர்மானித்தேன்.
மஹிந்தவை விட மைத்திரி சிறந்தவர்
அதேபோல் நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. நாடும் மக்களும் பாதுகாக்கப்படுவதாயின் அதற்கு நாட்டில் நல்லாட்சி அமைவதே அவசியமானது. அவ்வாறானதொரு நல்லாட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அருகில் இருக்கவில்லை. இரு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிடுகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விடவும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சிறந்தவர். மேலும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியால் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதற்கமையவே நான் சிந்தித்து தீர்மானம் எடுத்துள்ளேன்.
இனவாதம் உள்ள இடத்தில் நான் இல்லை. அதேபோல் அரசாங்கத்திற்குள் இன்று இனவாத செயற்பாடுகள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. பௌத்த அமைப்புக்களையும் கட்சிகளையும் தமது அதிகார எல்லைகளை தாண்டி செயற்பட வைத்து இந்த சிறுபான்மை மக்களுக்கு எதிரான கூட்டணியொன்று உருவாக்கி விட்டார்கள். நான் எப்போதும் இனவாத அரசியல் செய்ய விரும்பவில்லை. நான் முஸ்லிம் அரசியல் கலாச்சாரத்தை விடவும் தேசிய அரசியலை செய்வதற்கே முன்னுரிமை வழங்குகின்றேன். அதேபோல் என்னை முஸ்லிம் என சொல்வதை விடவும் இலங்கையன் என சொல்வதையே கௌரவமாக நினைக்கிறேன். எனவே பௌத்த இனவாதம் இருக்கும் இடத்தில் நான் இல்லை. அப்படியானதொரு இடத்தில் இருக்க விரும்பவும் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் நல்லாட்சிக்கு யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளேன். அது தவிர்ந்த தனிப்பட்ட எந்தவொரு காரணத்திற்காகவும் நான் யாரையும் ஆதரிக்கவில்லை.
நான் சுதந்திரக் கட்சிக்காரன் மேலும் நான் பொது எதிரணியில் இணைந்து கொண்டதனால் என்னை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரென பாகுபடுத்த வேண்டாம். நான் பொது எதிரணியினருக்கே ஆதரவு வழங்குகின்றேன். அது தவிர நான் ஐ.தே.கட்சிக்காரன் இல்லை.
மேலும் அடுத்த வாரத்துடன் நாட்டில் நல்லாட்சி ஆரம்பமாகின்றது. மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அவரின் ஜனாதிபதித்துவத்தின் கீழான நல்லாட்சி நிச்சயம் ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.