தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 20.12.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று துர்க்காவ் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலைபண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.
மிக நீண்ட காலங்களுக்குப் பிறகு துர்க்காவ் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் அரங்கம் நிறைந்து நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மீள் எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.
மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகள் மற்றும் புலத்தில் அயராது உழைத்த கேணல் பருதி அவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி நடனங்கள், காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு, கவிதையும் இடம்பெற்றதுடன் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த காணொளிக் காட்சித் தொகுப்புக்களும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.