தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலை அடையும் வரை “உரிமைக்காக எழு தமிழா” ஒன்று கூடல் இன்று 24.06.2024 திங்கட்கிழமை முற்பகல் 12.00 மணிக்கு பெல்சியம் நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் எழுச்சியாக இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பெல்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அருகில் உள்ள திடலில் இருந்து எழுச்சிப்பேரணி ஆரம்பித்து நகர்ந்து சென்று ஐரோப்பிய முன்றிலை அடைந்து அங்கு தரித்து நின்று எமக்கு நீதிவேண்டி குரல் எழுப்பப்பட்டது.
பின்னர் அங்கிருந்து நகர்ந்த பேரணி மீண்டும் திடலை அடைந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையின் முன்பாக நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
இளையோர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பெல்சியம் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
இளையோர்களால் மாவீரர் திரு உருவப்படங்களுக்கான மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இளையோரால் எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் இளையோர்கள் எமது போராட்டத்தின் நோக்கப் பற்றி உணர்வு பொங்க உரையாற்றியிருந்தனர்.
குர்திஸ்தான் மக்களின் சார்பில் அதன் பிரதிநிதி ஒருவர் ஆங்கில மொழியில் உரைநிகழ்த்தியிருந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
பிரித்தானியா கலைபண்பாட்டுக் கழகத்தின் நெறிப்படுத்தலில் ‘விழுதுகள்” என்ற நாடகத்தை மாணவர்கள் சிறப்பாக ஆற்றுகை செய்திருந்தனர். குறுகிய நேரத்தில் தாயகக் கொடுமைகளை கண்முன்னே கொண்டுவந்திருந்தனர்.
நிறைவாக பிரித்தானியா கலைபண்பாட்டுக் கழகத்தின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற எழுச்சி நடனம் சிறப்பாக அமைந்திருந்து.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தபின்னர், தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
கடும்வெய்யிலுக்கு மத்தியில் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு, நீர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பேருந்துகள், மகிழுந்துகள் மூலம் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வரும் 16.09.2024 திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் இடம்பெறவுள்ள எழுச்சி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு)