பிரான்சின் நாடாளுமன்றத்தேர்தல் எதிர்வரும் யூன் 30 ஆம் நாள் முதற்கட்டமாகவும், யூலை 07 ஆம் நாள் இரண்டாம்கட்டமாகவும் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களிக்கவேண்டியதன் அவசியம் குறித்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-
பிரான்சு நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலும், தமிழ்மக்களின் வாக்குப்பலத்தின் பங்களிப்பும்!
18.06.2024
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ தேச பிரான்சு நாட்டுக் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் அதன் உப கட்டமைப்புகளும் விடுக்கும் பணிவான வேண்டுகோள் யாதெனில்,
பிரான்சின் நாடாளுமன்றத்தேர்தல் எதிர்வரும் யூன் 30 ஆம் நாள் முதற்கட்டமாகவும், யூலை 07 ஆம் நாள் இரண்டாம்கட்டமாகவும் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது நவீன பிரான்சு அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், எதிர்காலத்தில் வெளிநாட்டவர்களின் அரசியல் நிலையைத் தீர்மானிக்கும் களமாகவும் அமையலாம் என அரசியல் ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது.
இன்று உலகின் பல நாடுகளும் உலக மக்களும் ஜனநாயக ஆட்சியையே விரும்புகிறார்கள். மனித சமுதாயம் கடந்து வந்த அரசியல் அமைப்புகளில் ஆகச் சிறந்தது ஜனநாயகம் என்றால் அது மிகையல்ல. ஜனநாயக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிப்பது தேர்தல் ஆகும். தேர்தல்களை நடத்துவதன் மூலம் சட்டசபை நிர்வாக அமைப்புகள் பகுதி சார்ந்த மற்றும் உள்ளூர் அரசு போன்ற அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு தகுதியுள்ள நபர்கள் நிர்வகிக்கப்படுகிறார்கள். எனவே, தேர்தல் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவருமே கருத்தில் கொள்ளவேண்டும்.
பிரான்சு வாழ் குடிமகன் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வாக்களிக்க வேண்டும். யார் நாட்டை ஆளவேண்டும், யார் ஆளும் அதிகாரத்திற்குப் பொருத்தமானவர்கள் என்பதைத் தீர்மானிக்க மக்களுக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த உரிமை வாக்குரிமை ஆகும். சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். எதற்காகவும் வாக்குரிமையை விட்டு கொடுத்தல் கூடாது.
பிரெஞ்சு தேச குடயுரிமைகுடிமகனாக உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. எனவே, 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தாம் விரும்பும் தலைவர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்வதற்கும் அல்லது அவர்களுக்கு வாக்களிப்பதற்கும் ஒவ்வொரு பிரெஞ்சு தேசம் வாழ் பிரதிநிதிகளுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
அலட்சியம் வேண்டாம் எம் தேச மக்களே! வாக்கின் அருமை புரிந்திடுங்கள்! வாக்களிக்கும் உரிமை கொண்டவர்களும், 18 வயது நிறைந்தவர்களும் உங்கள் வாக்குரிமையை பதிவுசெய்யுங்கள்!
பிரான்சு நாடு நமக்குத் தந்த பெருமை நமக்கு வாக்களிக்கும் உரிமை என்பதே!
அலட்சியம் வேண்டாம் தேச மக்களே! வாக்கின் அருமை புரிந்து வாக்களிப்பதுடன் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்களையும் வாக்களிக்கச் செய்யவும்.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.