தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து என்கிறார் வ.கௌதமன்!

0
61

“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து என்று தமிழ் பேரரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார.

அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:

.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 13 உயிர்களும் செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் 8 உயிர்களும் மெத்தனால் கலந்த கள்ள சாராயம் அருந்தி உயிர்விட்ட ஓராண்டிற்குள் தற்போது கள்ளக்குறிச்சியில் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் செத்து, 100க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற செய்தி இதயத்தில் ஈரம் உள்ளவர்களை நடுநடுங்கச் செய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்கின்ற கயவர்களுக்கு துணை நிற்கின்ற ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும் இம்மாபெரும் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் இல்லையேல் ஓரிரு தினங்களுக்குள் பூரண மதுவிலக்கினை பிரகடனப்படுத்த வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அரசு என்பது அந்த நிலத்தில் வாழ்கின்ற குடிமக்களை காப்பதற்குத்தானே தவிர குடிக்க வைத்து கூட்டம் கூட்டமாக கொல்வதற்கு அல்ல என்பதை இனியாவது தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட 200 நபர்கள் கள்ளச்சாராயம் குடித்ததாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கல்வராயன் மலையில் நீண்ட நெடுங்காலமாக கள்ளச்சாராயம் _காய்ச்சுவது, அரசுக்கும் காவல்துறைக்கும் அவ்வப்போது ஆட்சி செய்கின்ற அரசியல்வாதிகளுக்கும் தெரிந்தே திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்ற இந்த வியாபாரத்தை இனியும் மூடி மறைக்க முடியாது. எத்தனையோ முறை பொதுமக்கள் தடுத்தும், அதிகார வர்க்கத்திடம் முறையிட்டும் கூட கண்டு கொள்ளாமல் போனதால்தான் இன்று கள்ளக்குறிச்சி சுடுகாடாக மாறி ஒப்பாரி வைத்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது. தமிழினத்தின் சங்க கால போர்களில் சண்டையிட்டு செத்ததை விட நிகழ்கால அரசுகள் நடத்துகின்ற ஃபாரிலும், பீரிலும் செத்துக் கொண்டிருக்கின்றவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசு சாராயக்கடையை மூடினால் கள்ளச்சாராயம் தலைவிரித்தாடும் என்கிறீர்கள். அரசு நிறுவனம் காய்ச்சி விற்கின்ற சாராயமே ஆறாக ஓடிக்கொண்டிருக்கும்போது, அரசின் தயவால் அயோக்கியர்கள் காய்ச்சி விற்கின்ற கள்ளச்சாராயம் கடலளவு வியாபாரம் நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பக்கம் கள்ளச்சாராயம் குடித்து இப்படி அவ்வப்போது செத்து எண்ணற்ற பெண்கள் கத்தி கதறி தாலியறுத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நல்ல சாராயம் என்று கூறி டாஸ்மாக்கில் விற்கின்ற சாராயத்தைக் குடித்து லட்சக்கணக்கான பெண்கள் நீண்ட நெடுங்காலமாக தாலியறுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நிலை எப்பொழுது மாறும்?

கழக ஆட்சி அமைந்தால் முதல் கையெழுத்தே மதுவிலக்காகத்தான் இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதியினை இனி எந்த கல்வெட்டில் எழுதி வைப்பது? ஒரு குடும்பத் தலைவன் இறந்தால் ஒரு தலைமுறையே அழிந்துவிடும். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாழ நான்கு தமிழ் தலைமுறைகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டது. இன்று கண் துடைப்புக்காக கலெக்டர், காவல்துறை அதிகாரிகள் இடம் மாற்றப்படுகிறார்கள். இதுதான் தண்டனையா? இதனால் நிரந்தர தீர்வு வந்துவிடுமா? இந்த லட்சணத்தில் மதுவிலக்கிற்கென்று ஒரு அமைச்சர் வேறு? இத்தனை பலி வாங்கியதில் மாவட்ட நிர்வாகத்திற்கு மட்டும்தான் பங்கு உண்டு என்றால் மாநிலத்தை ஆளும் நிர்வாகத்திற்கு பங்கு இல்லையா என்ன?. அரசின் கவனக்குறைவால் மக்கள் செத்தால் மக்களின் வரிப்பணத்தை எடுத்து நிவாரணம் கொடுப்பது ஒரு அரசுக்கு அழகா?. மாறாக இதற்கு தார்மீக பொறுப்பான அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சம்பளத்திலிருந்து ஏன் இனி எடுத்துத் தரக்கூடாது?.
இதற்கெல்லாம் தண்டனையாக நீங்கள் பதவி கூட விலக வேண்டாம். அதற்குப்பதிலாக தமிழ்நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்டு வரும் போது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்குப் போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே, அதை மட்டுமாவது உடனே நிறைவேற்றுங்கள். உங்கள் தலைமுறை நன்றாக இருக்கும். விலை மதிக்க முடியாத 50க்கும் மேற்பட்ட உயிர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு உடனடியாக பூரண மதுவிலக்கு கொள்கையை பிரகடனப்படுத்த வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். தவறு செய்வது மனித இயல்பு அதற்கு பரிகாரம் உண்டு. ஆனால் பாவத்திற்கு என்றுமே விமோசனம் கூட இல்லை.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
சென்னை
20 06 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here