இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில், ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையென ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் சிறந்த சமிக்ஞைகளாக தென்பட்டாலும், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை கொண்டுள்ள தாமதத்திற்கு தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து இலங்கை முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென குறிப்பிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்திலேயே எல்லா பிரச்சினைகளும் தங்கியுள்ளதால், முதலில் பொறுப்புக்கூறல் விடயம் நிறைவேற்றப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மனித உரிமை விவகாரத்தில் தம்மால் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லையெனவும், இலங்கை அரசு அழைக்கும் பட்சத்தில் தாம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய தயாராக உள்ளதாகவும் கிறிஸ்ரோப் ஹெய்ன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.