அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் இணைந்த இரண்டாவது தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா கார்ஜ் லே கோணேஸ் நகரில் 16.06.2024 அன்று நடைபெற்றது.
இம்மதிப்பளிப்பில் ஆற்றுகைத் தேர்வு நிறைவு செய்த 29 மாணவர்களுக்குக் கலைமணி விருதுகள் வழங்கப்பட்டன. அத்தோடு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்-தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தோடு இணைந்து 25, 20, 10 ஆண்டுகால பணிநிறைவு செய்துள்ள தமிழ்க்கலை ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும், 2019, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழ்க்கலைத் தேர்வில் பிரான்சு மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றன.
விருதுபெறும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் இன்னிய இசையுடன் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு, அகவணக்கம் மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் மூன்று ஆசிரியர்கள் ‘’கலைச்சுடர்’’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்தோடு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் பத்து ஆசிரியர்களும் 10 ஆண்டுகளுக்கு பணியாற்றிவரும் 02 ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும் 2019, 2021 ,2022 ஆண்டுகளில் தமிழ்க்கலைத் தேர்வுகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் சான்றிதழும் பதக்கமு ம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
மதிப்பளிப்பினை கனடாவிலிருந்து வருகைத் தந்திருந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை கார்ஜ் லே கோணேஸ் நகர பிதாக்கள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஏனைய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் தமிழ்க்கலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா மாலை 6.30 மணியளவில் நிறைவுபெற்றது.