பிரான்சில் தமிழீழ பெண்கள் அணி உறுப்பினர்களுக்கு வரவேற்பும் மதிப்பளிப்பும்!

0
279

தமிழீழ பெண்கள் அணியில் பிரான்சில் இருந்து சென்றவர்களுக்கான வரவேற்பு உபசார மதிப்பளிப்பு ஒன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் கடந்த (15.06.2024 ) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
கொனிபா மகளிர் உலகக்கிண்ணம் 2024 கடந்த 04.06.2024 நோர்வே நாட்டில் நடைபெற்றது. அதில் நாடுகள் அற்ற பல நாடுகளோடு தமிழீழப் பெண்கள் அணி பங்கு பற்றி பல வெற்றிகளை தமிழீழ அணிக்கு பெற்றுத்தந்திருந்தது. இத்தமிழீழ அணியில் மூன்று பெண் வீராங்கனைகளும், அதன் பிரதம பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளர்கள் நெறிப்படுத்தாளர்களும் பிரான்சு நாட்டிலிருந்து சென்றிருந்தனர். போட்டிகள் நிறைவு பெற்று பிரான்சு திரும்பியிருந்த வீராங்கனைகளும் அதன் பிரதம பயிற்சியாளர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் கிளைப் பொறுப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை, உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட மற்றும் மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர், மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், தமிழ்ப் பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, உறுப்பினர்களால் வரவேற்று மதிப்பளிக்கப்பட்டனர்.

தமிழீழ அணியின் உருவாக்கமும் நோக்கமும் பிரான்சு மண்ணில்தான் எண்ண விதையாக ஊன்றப்பட்டது என்றும் அது இன்று ஏனைய நாடுகளின் பெரும் ஒத்துழைப்புடன் இன்று சிறந்து பெருமையாக நிற்பதையும் அதற்கு பின்புலமாக நின்ற அத்தனை விளையாட்டுக் கழகத்திற்கும், வீரர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், இவ்வீரர்களை தமிழீழ தேசிய அணிக்கு கொடுத்த கழகங்களையும் தமிழர்களின் தாய்க்கட்டமைப்பாக இருந்து பணியாற்றி வரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அனைவருக்கு நன்றியையும் பாராட்டுதல்களையும் வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுகள் கூறப்பட்டதோடு, அவர்களுக்கு நினைவு பரிசில்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்கள், இளையோர் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பங்குபற்றிய வீராங்கனை மற்றும் பயிற்சியாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். தம்மோடு உலகில் பல் நாடுகளிலிருந்து வீராங்கனைகள் வந்திருந்தமையும் அவர்களின் விளையாட்டில் உள்ள ஆர்வம், தமிழீழம் என்ற தமது தேசம்மீது உள்ள பற்றுதல் பற்றியும் அதனைத் தாம் விளையாட்டின் ஊடாக புகழ்பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பேச்சுக்கள் இருந்ததை கண்டதாகவும், இவர்களுக்கு பெரும் பொருளாதார பின்புலம் இருக்குமாயின் பல வெற்றிகளைத் தாம் அடையலாம் என்றும் தம்மோடு விளையாடி பின்னடைவை சந்தித்த ஏனைய நாட்டு வீராங்கனைகள் முகத்தில் இருந்த வேதனையைத் தாம் பார்த்ததாகவும் அவர்கள் தமது நாட்டிலும் தமது இனத்தினதும், நாட்டினதும் வெற்றியிலும் எப்படியிருந்தார்கள் என்பதையும் அறிந்து கொண்டதே பெரிய விடயம் என்றும் இதற்காக எம்மவர்கள் பலர் தமது நாடுகளில் படித்த உயர் படிப்பையும், அதன் பரீட்சையை கூட விட்டு விட்டு வந்து போட்டியில் பங்குகொண்டு தம்மை அர்ப்பணித்திருந்தார்கள் என்று கூறியிருந்தனர். எனவே இவர்களுக்கு பெரும் பின்புலமாக இருந்து தேவையான பலத்தை ஒவ்வொரு தேசப்பற்று மிக்க மக்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த மதிப்பளிப்பு என்பது அதுவும் தாய்க்கட்டமைப்பு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செய்திருப்பது பெரிய பலத்தை தங்களுக்கு தந்திருக்கின்றது இதுவோர் தேசத்தின் அங்கீகாரம் என்றும் கூறியிருந்தனர். சிறிய சிற்றுண்டி விருந்து உபசாரத்துடன் பாராட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
(ஊடகப்பிரிவு – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here