ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்பட்ட காசா போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹமாஸ் இணக்கத்தை வெளியிட்டிருப்பதோடு, இதனை ‘நம்பிக்கை தரும் சமிக்ஞை’ என்று பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தின்படி அதன் ஆதரவுடன் பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் (10) கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு 15 அங்கத்துவ நாடுகளில் 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததோடு ரஷ்யா வாக்களிப்பதில் இருந்து தவிர்த்துக்கொண்டது.
இதில் முழுமையான போர் நிறுத்தம் ஒன்று வலியுறுத்தப்பட்டிருப்பதோடு, இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக ஹமாஸின் பிடியில் இருக்கும் பணயக்கைதிகள் மற்றும் உயிரிழந்த பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் இஸ்ரேலால் ஏற்கப்பட்டதாகவும் ஹமாஸ் அமைப்பு ஒப்புதலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தை ஏற்பதாகவும் அது தொடர்பில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம், இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறுதல் மற்றும் இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பகரமாக பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலான தீர்மானத்தை தமது அமைப்பு ஏற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இஸ்ரேல் இதனை கடைப்பிடிப்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ‘ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஆக்கிரமிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதில் அமெரிக்க நிர்வாகம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான உண்மையான சவாலை எதிர்கொண்டுள்ளது’ என்று அபூ சுஹ்ரி கூறினார்.
டெல் அவிவில் இஸ்ரேலிய தலைவர்களை சந்தித்துப் பேசிய பிளிங்கன், ‘இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் முடிவடைந்த பின் காசாவிற்கான திட்டங்கள் குறித்த உரையாடல்கள் தொடரும்’ என்று குறிப்பிட்டார்.
ஹமாஸின் அறிவிப்பு நம்பிக்கை தருகின்றபோதும் காசாவில் இருக்கும் தலைவர்களின் உறுதியான அறிவிப்பும் தேவையாக உள்ளது என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். ‘அதுவே கணக்கில் கொள்ளப்படுவதோடு அதுவே எமக்கு இன்னும் கிடைக்கவில்லை’ என்றார்.
மூன்று கட்ட போர் நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த மே 31 ஆம் திகதி தொலைக்காட்சி அறிவிப்பு ஒன்றில் வெளியிடப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஏற்கனவே உலகின் செல்வந்த நாடுகளின் அமைப்பான ஜி7 நாடுகள் ஆதரவு அளித்திருந்த நிலையிலேயே பாதுகாப்புச் சபை இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேலின் மூன்று பேர் கொண்ட போர் கால அமைச்சரவை ஒப்புதல் அளித்தபோதும் இஸ்ரேலிய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசில் இருக்கும் தீவிர வலதுசாரிகள் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். நெதன்யாகுவும் பைடனின் இந்தத் திட்டத்தை ஆதரிப்பது பற்றி நேரடியாக பதிலளிக்கவில்லை.
முன்னதாக காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் வலியுறுத்தி வந்ததோடு இஸ்ரேல் தற்காலிக போர் நிறுத்தத்தையே கோரி வந்ததால் அதனை எட்டுவதில் இழுபறி நீடித்து வந்தது.
எனினும் இந்தப் போர் நிறுத்த திட்டத்தை காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் சந்தேகத்துடனேயே பார்த்து வருகின்றனர். கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னர் இடம்பெற்ற போர் நிறுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன.
‘அதனை நாம் பார்த்த பின்னர் தான் உண்மையில் நாம் நம்புவோம்’ என்று மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் இடம்பெயர்ந்து கூடாரத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வரும் 47 வயது ஷபான் அப்தல் ரவூப் தெரிவித்தார். இந்தப் பகுதி இஸ்ரேலின் தொடர்ச்சான தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
‘எமது உடைமைகளை எடுத்துக்கொண்டு காசா நகருக்குச் செல்ல தயாராகும்படி அவர்கள் குறிப்பிட்டாலும் அது உண்மையா என்பது எமக்குத் தெரியாது’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
இந்தப் போர் நிறுத்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் கைதிகள் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால போர் நிறுத்தம் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் திட்டம் அமெரிக்காவின் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டத்தில் காசாவை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று ஜோர்தானில் நடைபெற் காசா உதவிக்கான அவசர மாநாட்டில் உரையாற்றிய எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, காசா தற்போது மனிதர்கள் வாழ தகுந்த இடமாக இல்லை’ என்று குறிப்பிட்டார்.
‘காசாவில் நடப்பதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும. காசாவில் உட்கட்டமைப்பு, அதேபோன்று காசாவில் சுகாதார அமைப்பை இஸ்ரேல் அழித்துவிட்டது. காசா தற்போது மனிதர்கள் வாழ தகுந்த இடமாக இல்லை. ரபாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின் விளைவுகள் குறித்து எகிப்து பல முறை எச்சரித்தது. இந்த இராணுவ நடவடிக்கை காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்துவிட்டது’ என்றும் சிசி குறிப்பிட்டார்.
கடந்த மே மாத ஆரம்பத்தில் எகிப்து மற்றும் காசாவுக்கு இடையிலான ரபா எல்லைக் கடவையை இஸ்ரேல் கைப்பற்றியது தொடக்கம் எகிப்தில் இருந்து காசாவுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது ஏற்கனவே உணவு, மருந்து, எரிபொருளுக்கு காசாவில் நீடிக்கும் தட்டுப்பாட்டை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
காசாவுக்கு நுழைவதற்கு தயாராக 2,000க்கும் அதிகமான மனிதாபிமான உதவி மற்றும் வர்த்தகப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்தில் காத்திருப்பதாக ஐரோப்பிய சிவில் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
‘ரபாவில் தீவிர இராணுவ நடவடிக்கை இடம்பெறுவதால் எல்லைக்கடவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. நீடித்த, தடையற்ற மற்றும் பாதுகாப்பான மனிதாபிமான உதவிகள் செல்வதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது’ என்று அந்த அமைப்பு எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் 40 பேர் பலி
போர் நிறுத்தத்திற்கு பாதுகாப்புச் சபை ஆதரவு அளித்தபோதும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. காசா நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களாவர்.
மத்திய காசாவில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் நேற்று மூன்று பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. அல் சஹாபா வீதியில் ஒன்று கூடியிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து அந்த ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக வபா செய்தியாளர் குறிப்பிட்டார்.
எனினும் மத்திய காசாவில் கடந்த ஆறு நாட்களாக முன்னெடுத்த படை நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று அறிவித்தது. மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாம் மற்றும் டெயிர் அல் பலா பகுதிகளில் இஸ்ரேலின் 98 ஆவது படைப்பிரிவு கடந்த ஜூன் 5 ஆம் திகதி இந்தப் படை நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்தப் படை நடவடிக்கையின்போதே நுஸைரத் அகதி முகாமில் நான்கு பணயக்கைதிகளை இஸ்ரேலிய படை மீட்டது. இதன்போது 270க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 120 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இதன்படி கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 37,164 ஆக உயர்ந்துள்ளது. இதில் மேலும் 84,832 பேர் காயமைந்துள்ளனர்.