தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று, போலி நாணயத்தாள்கள் அச்சிடும் இயந்திரத்தை விற்பனை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார், இந்நபர் கைதான விடயமறிந்த அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடும்பத்தினருடன் சென்ற நபர் ஒருவர் அரியாலை பகுதியில் நாள் வாடகைக்கு வீடொன்றினை பெற்று, குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (8) இந்த நபர் திருநெல்வேலி சந்தையை அண்மித்த பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரம் மற்றும் நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படும் தாள்கள் என்பவற்றை நபர் ஒருவருக்கு விற்பனை செய்யும் நோக்குடன் காத்திருந்தபோது, கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, சந்தேக நபர் வைத்திருந்த பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரம் விற்கப்படுவது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு கோப்பாய் காவல்துறையினர் சென்றவேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளையில், அவர் குடும்பத்துடன் அரியாலைப் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அந்த வீட்டுக்கு காவல்துறை குழு விரைந்தபோது, வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
காவல்துறை இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.