வடமாகாணத்தில் மணல் அகழப்படும் வடமராட்சி கிழக்கு மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அவை கடவுளால் கூட கைவிடப்பட்ட பிரதேசங்களாகக் காணப்படுவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மணல் அகழும் பிரதேசங்களில் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானங்களை அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக்குப் பயன்படுத்த வேண்டும். நெடுந்தீவுக்கு ஒரு படகு வாங்கி, அப்பகுதிக்கான சுற்றுலாத்துறையை வளர்க்க வேண்டும். நல்லினப் பசுமாடுகளை தென்னிலங்கையிலிருந்து கொள்வனவு செய்யாமல், அதனை வட மாகாணத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வடமாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பனை வளம் பாதுகாக்கப்பட்டு, இங்கிருந்து பனை உற்பத்திகளை தென்னிலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும்.மேலும், மருதங்கேணியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அந்தத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதேபோல், இரணைமடு குடிநீர் திட்டமும் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார்.