சொந்த மண்ணில் பிடுங்கி எறியப்பட்ட விவசாயிகளின் விளைநிலங்களில் உல்லாச விடுதியை அமைக்கும் இராணுவத்தினர்!

0
605

.

army

சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக்கூலிகளாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மகிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் இவற்றை விடுவித்து எமது மக்களிடம் கையளிப்பதாக இல்லை என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது அமைச்சின் கீழ் விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகிய 5 துறைகள் இயங்கி வருகின்றன. அத்தோடு, அமைச்சின் ஊடாக நீர்வழங்கல், உணவு வழங்கல்,மற்றும் சுற்றாடல் பாதுகாப்புச் சேவைகளையும் வழங்கி வருகிறோம். இவற்றுக்கான 2016 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்கு முன்பாக, இந்த உயரிய சபையின் கவனத்துக்குச் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வடக்கு மாகாணசபை தோற்றம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதும், போர் முறித்துப்போட்ட வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தை இன்னமும் எம்மால் நிமிர்த்த முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
வலி.வடக்கின் வளமான மண்ணை விட்டு எமது விவசாயிகள் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் கடந்து விட்டபோதும்கூட, அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை, அண்மையில், வெள்ள நிவாரணமாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர்களின் சில முகாம்களுக்குச் சென்றிருந்தோம். அங்கு, முதலில் குறிப்பிட்;ட அம்மாவை நான் காணவில்லை. ஆனால், அவருக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஏராளமான அம்மாக்கள் ஒட்டிவாடிய உடலுடன் எமது அரிசிப் பொதிகளுக்காக வரிசையில் நின்றதைப் பார்த்தேன். விவசாயிகளுக்கும் மண்ணுக்கும் இடையிலான பந்தம் அதிகம், இவர்கள் தமது சொந்த மண்ணைத் தவிர வேறு எந்த மண்ணிலும் ஊன்றிக்கிளைக்கமாட்டார்கள். சொந்த மண்ணுக்கு இவர்கள் திரும்பாதவரைக்கும், இவர்களது வாழ்வும் எமது விவசாயப் பொருளாதாரமும் நொடிந்தே நீடிக்கும்.
எமது விளைநிலங்களில் இராணுவம் இப்போதும் பயிர்செய்து, சந்தைப்படுத்தி வருகிறது. படையினர் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகிறார்கள் என்று பலரும் குரலெழுப்பியதன் விளைவாக, இப்போது படையினர் தமது உற்பத்திகளை முன்னரைபோலத் தாமே சந்தைகளுக்குக் கொண்டுவராமல் உள்ளுர் முகவர்கள் மூலம் கொடுத்தனுப்பி வைக்கிறார்கள். செலவில்லா விவசாயம் என்பதால் படையினர் குறைந்த விலையில் சந்தைப்படுத்தி வருகிறார்கள். இதனால், எமது விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு உரிய விலையை நிர்ணயிக்க முடியாமல் தொடர்ந்தும் நட்டத்தையே சந்திக்க வேண்டியுள்ளது.
பொதுமக்களின் விளைநிலங்களில் இருந்து மட்டுமல்ல, எமது திணைக்களங்களுக்குச் சொந்தமான பண்ணை நிலங்களில் இருந்தும் இராணுவம் விலகுவதாக இல்லை. எமது விவசாயத்துறையின் மேம்பாட்டில் பெரும் பங்காற்றிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப்பண்ணை, இரணைமடு சேவைக்காலப்பயிற்சி நிலையம், கனகராயன்குள தாய்த்தாவரப்பண்ணை, புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் அலுவலகம், மன்னார் விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர் பரப்பளவு இப்போதும் படையினர் வசமே உள்ளது. வட்டக்கச்சிப் பண்ணையையாவது முதலில் தாருங்கள் என்ற எங்களது கோரிக்கையைப் புறம்தள்ளி அங்கு படையினர் தற்போது புதிதாகக் கட்டம் ஒன்றை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
விவசாய நிலங்களின் அபகரிப்பு சத்தம் இல்லாது இன்னுமொரு வடிவிலும் ஆரம்பமாகியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிலங்களில் பற்றைக்காடுகள் வளர்ந்திருப்பதைக் காரணமாக்கி,வனவளத்திணைக்களமும், வனசீவராசிகள் திணைக்களமும், இந்நிலங்களில்  எல்லைக்கற்களை நாட்டித் தமதாக்கி வருகின்றன. இது, சூழற்பாதுகாப்பு என்று முகமூடியணிந்து எமது குடியானவர்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து விரட்டும் சூழலியல் ஏகாதிபத்தியமே தவிர, வேறொன்றல்ல.
13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு உரித்தாக்கப்பட்டிருந்த கமநல சேவைகள் திணைக்களம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் மத்திய அரசிடம் கைமாறிய பிறகு, விரல் விட்டு எண்ணக்கூடிய பாரிய குளங்கள் மற்றும் சில நடுத்தரக் குளங்களைத் தவிர சிறிய நீர்ப்பாசனக் குளங்களை நிர்வகிக்கும் உரிமை எங்களிடம் இருந்து இல்லாமல் போய்விட்டது. விவசாயிகளுக்கு உரங்களை வழங்கும் உரிமைகூட எங்களிடம் இல்லை. இதுதான் கள யதார்த்தம்.
வடக்கு மாகாணசபை என்ற சவலைப் பிள்ளையை, தமிழ்மக்களுக்குக் கொடுத்த கொழுத்த அரசியல் உரிமையாக உலகுக்குக் காட்டியவாறு மத்திய அரசு, தொடர்ந்தும் எம்மீது மேலாதிக்கம் செலுத்தியே வருகிறது. எமக்கான உரிமைகளை அங்கீகரிக்க மறுத்து எம்மை ஓரங்கட்டி எல்லா விடயங்களிலும் தலையீடுசெய்து வருகிறது. வடக்கு மாகாணசபை அரசியல்பேச வேண்டாம் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினாலே போதும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அரசியல் அதிகாரம் இல்லாமல் எத்தகைய நிலையான அபிவிருத்தியும் சாத்தியமாகாது என்பதால் மாகாண சபைக்கு, அதன் வடக்கு முதல்வருக்குத் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளில் தீர்க்கமான முடிவெடுப்பதற்குரிய கடப்பாடு இருக்கிறதென்பதை இங்கு அழுத்தந்திருத்தமாகப் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here