தமிழர் தாயகம் உட்பட நாட்டில் 15 இலட்சம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
புகைப்பழக்கத்திலிருந்து இளையோர் பலர் விடுபட்டு வருகின்றனர்.
எனினும், அவர்களை மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க பல்வேறு வழிகளில் ஈர்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளையோர், சிறுவர்களை புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொள்கின்றன.
இது தொடர்பில் சமூகத்திலுள்ளவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் பலரும் பள்ளிச்சீருடையுடனேயே புகைத்தல் மற்றும் போதைப் பாவனையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறானவர்கள் தொடர்பிலும் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலம் பெயர் தேசங்களிலும் எம் இளையோர் பலர் பொழுது போக்காக புகைத்தல் மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்கள் குறித்தும் சமூக ஆர்வலர்கள் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவதானிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் எமது தமிழின இருப்பு, அடையாளம் என்பன கேள்விக்குரியதாகிவிடும் என்பதே பலரின் கருத்தாகவும் இருந்துவருகிறது.