மீண்டும் பிரான்சு அரச கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை இணைத்துக்கொள்ளவேண்டி, தமிழ்மக்கள் சார்பான நியாயங்களை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துத் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கை ஒன்றை பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-
தமிழ்மொழியை மீட்டெடுத்துத் தொடர்வோம்!
பிரான்சில் மிக நீண்ட காலமாக ‘வாழும் வெளிநாட்டு மொழி’ என்ற அடிப்படையில் (Langues vivantes étrangères) தமிழ்மொழி ஒரு தெரிவுப்பாடமாகத் தேசியக் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பிரான்சுப் பள்ளிகளில் தமிழ் மாணவர்கள் தமது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (BAC) விருப்பத்தெரிவாகத் தமிழ்மொழியை ஒருபாடமாகத் தேர்வு எழுதவும், தமிழ்த்தேர்வுப் பெறுபேற்றைத் தமது ஒருமித்த மதிப்பெண் தொகுப்பில் இணைக்கவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2021 ஆண்டு முதல் விருப்பத்தெரிவுப் பாடப்பட்டியலிலிருந்து தமிழ்மொழி, பிரான்சு உயர்கல்வி அமைச்சினால் நீக்கப்பட்டது. இந்த நீக்கமானது பிரான்சு வாழ் தமிழ் மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்க்கல்வி ஆர்வலர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியினையும் கவலையினையும் ஏற்படுத்தியிருந்தது.
உலகின் மிகத்தொன்மையும் நீடித்த ஆயுளும் கொண்ட செழுமைமிக்க தமிழ்மொழியின் பெருமையையும் அதன் அறிவியல் கட்டமைப்பையும் அறிந்து கொண்ட பல்வேறு நாடுகள் தமது தேசியப் பாடத்திட்டத்தில் எம் தாய்மொழியை இணைத்துள்ள இவ்வேளையில் பிரான்சு அரசு அதனைத் தெரிவுப்பாட நிலையிலிருந்து நீக்கியிருப்பது கெடுவாய்ப்பாகும்.
புலம்வாழ் தமிழர்கள் எதிர்காலத்தில் தமது இனஅடையாளங்களைத் தொலைக்காதிருப்பதற்கும் தாய்மொழியின் இருப்பினை உறுதிசெய்வதற்கும் இளையோருக்கான தமிழ்மொழிக்கல்வி காலத்தின் அகத்தியமாகும். பிரான்சில் தமிழ்மொழிக்கல்வி கற்பதில் பல இளையோர்கள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், அரசின் இந்த நடவடிக்கை அவர்களது தன்னார்வத்திற்குப் பெருந்தடையாக அமைந்துள்ளது.
மீண்டும் பிரான்சு அரச கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை இணைத்துக்கொள்ளவேண்டி, தமிழ்மக்கள் சார்பான நியாயங்களை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துத் இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழார்வலர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் இக்கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் இணைந்து செயலாற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். எமது அடையாளமான தமிழ்மொழியை நாம் வாழும் நாட்டில் அதன் சட்டதிட்டங்களுக்குட்பட்டுக் கற்கவும் வளர்க்கவும் எமக்கு உரிமையும் கடமையும் இருக்கிறது.
தமிழ்மொழியின் நீடித்த இருப்பின் தேவையையும் தமிழரின் மொழி மீதான பெருவிருப்பையும் பிரான்சு அரசிற்கு எடுத்தியம்பும் கோரிக்கைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பங்காளிகளாக இருப்பது தாய்மொழி மீதான பற்றைப் பறைசாற்றும்.
தமிழுக்காய் இணைவோம்! தமிழராய் நிமிர்வோம்!
சா. நாகயோதீஸ்வரன்
பொறுப்பாளர்
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு.
கீழுள்ள இணைப்புகளின் ஊடாக உங்கள் கையெழுத்துக்களை இடமுடியும்.
https://www.change.org