பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (18.05.2024) சனிக்கிழமை பேரெழுச்சி கொண்டது.
பிற்பகல் 14.00 மணியளவில் பாரிஸ் நகரின் Place de la Republique பகுதியில் ஆரம்பமாகிய பேரணி Place de la Bataille de Stalingrad பகுதியில் நிறைவடைந்தது.
Place de la Bataille de Stalingrad பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மற்றும் நினைவுச்சின்னத்தின் முன்பாக பொதுச் சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்கால் மண்ணில் 13 இரத்த உறவுகளை இழந்த குடும்ப உறுப்பினர் திரு. வரன் ஏற்றிவைக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் உறவுகளை இழந்த மற்றொரு குடும்ப உறுப்பினர் திரு. சிறி அவர்களும் முள்ளிவாய்க்காலில் சாவடைந்த மருதலிங்கம் சியாமலா அவர்களின் சகோதரனும் மலர்வணக்கம் செலுத்தினர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் அணிவகுத்து ஒவ்வொருவராக உணர்வோடு மலர்வணக்கம் செலுத்தியிருந்தனர்.
வீரம்செறிந்த முள்ளிவாய்க்கால் மண்ணும் நினைவேந்தலுக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
Depute Val d”Oise Carlos Bilingo, Conseil Municipaux Maire la Cournuve, Maire Bondy, Maire adjoint Noisy le sec, Conseil Général Seine Saint Denis அவர்களும் கலந்து கொண்டு மலர்வணக்கம் செலுத்தியதோடு தமது ஆதரவுகளை அனைவரும் அரங்கில் தெரிவித்துச் சென்றிருந்தனர்.
பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழக கலைஞர்கள் மற்றும் தமிழ்ச்சோலை மாணவர்கள் சிறிலங்கா இராணுவ அடக்குமுறை, இலங்கையின் சமகால அரசியலை ஊர்திப் பவனியில் ஆற்றுகைப்படுத்தியிருந்தமை அனைவரையும் கவர்ந்திருந்தது.
திறான்சி தமிழ்ச்சோலை, புளோமெனில் தமிழ்ச்சோலை, ஆதிபராசக்தி, செவ்ரோன் தமிழ்ச்சோலை, கவின் கலையகம், சேர்ஜி தமிழ்ச்சோலை, குசான்வீல் தமிழ்ச்சோலை, பொண்டி தமிழ்ச்சோலை செல் தமிழ்ச்சோலை, ஒள்னேசுபுவா 2 தமிழ்ச்சோலை மாணவ மாணவியரின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த எழுச்சி நடனங்களும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றிருந்தன.
ஒள்னே சுபுவா 2 மாணவர்களின் “புதிய தலைமுறை” என்ற பிரெஞ்சு மொழி நாடகமும் பிரெஞ்சு மொழி மக்களைத் திரும்பிப்பார்க்க வைத்தது.
தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களின் பிரெஞ்சு மொழி உரையோடு, செல்வி றுக்சி வில்வராஜா மற்றும் பொண்டி தமிழ்ச் சோலை மாணவி அன்ரனி காவியா ஆகியோரின் பிரெஞ்சு மொழி உரைகளும் அரசியல் சமூக செயற்பாட்டாளர் திரு.மகிந்தன், தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் தமிழினி அகியோரின் தமிழ் மொழியிலான உரைகளும் இடம்பெற்ற அதேவேளை, சிறப்புரையை திரு.வினாசித்தம்பி மோகனதாஸ் அவர்கள் ஆற்றியிருந்தார்.
அனைத்துலகத் தொடர்பக கலைபண்பாட்டுக் கழகம் மே 18 இன் 15 ஆவது ஆண்டு நினைவாக நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
குறித்த நினைவெழுச்சி நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்டதுடன், பிரெஞ்சு வாழ் மக்களும் குறித்த நிகழ்வுகளைப் பார்த்து எமக்கு நடந்தகொடுமைகளைக் கேட்டு உணர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)