முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தொடர்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன் முழு வடிவம் வருமாறு:-
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு! 16.05.2024
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளான மே 18 முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டினை நெஞ்சங்களிலே சுமந்து ஆறாத வலிகளுடன் எமக்கான வழிபிறக்க வேண்டும்; சர்வதேச நீதிகிடைக்க வேண்டும் என்று பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் பிரான்சு தேசத்தின் மாநிலங்களில், மாநகரசபைகள் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாரிசின் புறநகர் பகுதிகளில் வாழும் தமிழீழ மக்களின் உணர்வுகளுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அனைத்துத் தமிழர் கட்டமைப்புகளும் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.
இப் பேரணியானது 18 ஆம் நாள் சனிக்கிழமை பி.ப. 13.00 மணிக்கு பாரிசின் மத்தியில் உள்ள சுதந்திரதேவி சிலையின் ( Place de La République ) முன்பாக ஆரம்பித்து பிரதான வழிகளின் ஊடாக பிரான்சின் சுதந்திர விடுதலை வரலாற்று புகழ்பெற்ற இடமான ( Place De la Bataille de Stalingrad ) என்னும் இடத்திற்கு சென்றடைந்து அங்கு நினைவேந்தல் நிகழ்வும், அரசியல் பிரமுகர்களின் எமக்கான ஆதரவுக்குரல்கள் ஒலித்தலும் இடம்பெறவுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த வாரம் முதல் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க சிறிலங்கா அரசு பல்வேறு நெருக்கடிகளைத் தாயகத்தில் ஏற்படுத்தியபோதும் எமது மக்கள் திரண்டெழுந்து ஓரணியில் நின்று அதனை எழுச்சியோடு எதிர்கொண்டு நிற்கின்றனர். அவர்களுடன் உலகத்தமிழர்களும், பிரெஞ்சு வாழ் தமிழீழ மக்களாகிய நாமும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று சர்வதேசத்திடம் நீதிகேட்போம்; சர்வதேசத்திற்கும், ஐரோப்பிய அரசுக்கும், பிரெஞ்சு அரசுக்கும் எமது வேணவாவை பேரணியின் மூலம் எடுத்துச்சொல்வோம் வாருங்கள்.
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு.