தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம்: வேல்முருகன்

0
215

velmuruganஇலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்தி திரை நட்சத்திரங்கள் பிரசாரம் மேற்கொண்டு வருவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிப்போம் என அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவக் காத்திருக்கும் கொடுங்கோலன் ராஜபக்சேவை ஆதரித்து இந்தி திரைப்படல உலகத்தைச் சேர்ந்த நடிகர் சல்மான்கான், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இலங்கையில் பிரசாரம் செய்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலக நாடுகளில் ‘இந்தியன்’ ஒருவன் பாதிக்கப்பட்டால் உடனே கொந்தளிக்கிற இந்திய உலகமும் இந்தி திரைப்பட உலகும் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் உறவுகள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது கை கட்டி வாய்மூடி மவுனம் காத்து இனப்படுகொலையை ஆதரித்தன.

700க்கும் மேற்பட்ட சொந்த நாட்டு குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்கள் துடி துடிக்க சுட்டுக் கொல்லப்படுகிற போதும் வாய் திறக்காமல்தான் இருக்கின்றன. இந்த வேதனையும் படுகாயமும் தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ராஜபக்சேவை ஆதரித்து இலங்கைக்கே போய் இந்தி பட உலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பிரசாரம் செய்திருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்.

ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் ஒரு அங்கமா? அல்லது தமிழினத்தை ஒடுக்குகிற இலங்கைத் தீவில் வாழுகிற சிங்களதேசம்தான் இந்தியாவின் ஒரு அங்கமா? தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். எங்கள் தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு மீறிவிட்டு இலங்கைக்குப் போய்  ராஜபக்சேவுக்கு பிரசாரம் செய்திருப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தி திரை உலகத்தின் இந்த தமிழினத் துரோகம் தொடர்ந்தும் நீடிக்குமேயானால் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இந்தித் திரைப்படங்களுக்கு போராளிக் குழுக்கள் பன்னெடுங்காலம் தடை விதித்திருப்பது போல தமிழ்நாட்டிலும் எந்த ஒரு இந்தித் திரைப்படத்தையும் எந்த ஒரு காலத்திலும் திரையிடவிடமாட்டோம். எந்த ஒரு இந்தி நடிகரையும் நடிகையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவும் விடமாட்டோம்.. என பகிரங்கமாக எச்சரிக்கிறோம். இதனால் இந்திப் பட உலகத்தவர், ராஜபக்சேவை ஆதரித்து பிரசாரம் செய்வது போன்ற நடவடிக்கைகளை இனியும் மேற்கொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும். தமிழ்த் திரை உலகத்தினரும் தமிழினத்தின் உணர்வுகளை இந்தி பட உலகத்தினருக்கு தெரியப்படுத்தி இத்தகைய தமிழினத் துரோகச் செயல்களில் எவர் ஒருவரும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here