பாராளுமன்றத்தில் பிரஞ்சு ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக் குழுவினர் பிரான்சு வாழ் தமிழ் அமைப்புகளை அழைத்து கலந்துரையாடப்பட்டது!

0
158

marie-george-buffet (1)கடந்த 09.12.2015 புதன்கிழமை பாராளுமன்றத்தில் பிரஞ்சு ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக்  குழுவினர்  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் 30ஆவது அமர்வின்போது  முன்வைக்கப்பட்ட பிரேரணைக்குப்  பின் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு  தொடர்ந்து நடைபெறும் பிரச்சினைகள் மற்றும் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான தமிழீழ மக்களின் நிலைப்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார நிலைகளைக் கேட்டு அறியும் முகமாக பிரான்சு வாழ் தமிழ் அமைப்புகளை அழைத்து கலந்துரையாடப்பட்டது.

பிரஞ்சு ஈழத் தமிழ் மக்களுக்கான நட்புறவுக்  குழுவின் தலைவர்  செய்யின் செயின்ட் டெனிஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி மேரி ஜோஜ் புவே தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின்போது தமிழர் ஒருங்கிணைப்பு குழு பிரான்சு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ் பெண்கள் அமைப்பு,மாவீரர் பணிமனை, ஸ்ராஸ்பேக் நகரத்தில் இருந்து ஐரோப்பிய தமிழர் ஒன்றியம்  ஊடகத்துறை – ஊடக இல்லம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகிய அமைப்புகள் கலந்துகொண்டு சிறிலங்காவில் இன்றைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் நிலைபற்றி ஆராயப்பட்டது. 

சந்திப்பை ஆரம்பித்து வைத்து பேசிய பிரஞ்சு ஈழத்தமிழ் மக்கள் நட்புறவுக் குழுத் தலைவி மேரி ஜோஜ் புவே அவர்கள் சிறிலங்காவில் தற்பொழுது தமிழ் மக்களின் பொருளாதார, அரசியல் நிலைமைபற்றியும் தமிழ்மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும், முன்னைய நிலையில் இருந்து மாற்றங்கள் நடைபெற்றுள்ளதா என்றும் அறிய ஆவலாக உள்ளதாக கூறி தமிழீழ மக்கள் பிரதிநிதியிடம் விளக்கம் கேட்டுக்கொண்டார்.

மக்கள் பேரவைப் பிரதிநிதி  பேசுகையில், தொடர்ந்தும் தமிழ் மக்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி வருவதாகவும், தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், பாலியல் வன்முறைகள் தொடர்வதாகவும் இதற்கெல்லாம் காரணம் தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள இராணுவம் செறிவாக இருப்பதே ஆகுமென்றும் கூறிக்கொண்டார். மேலும் சிறிலங்கா அரசால் செய்யப்பட்ட போர்க்குற்றத்தை சிறிலங்கா அரசே விசாரிக்கும் நிலையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கடந்த ஒக்டோபர், நவம்பர் மாதம் வரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்த யோசனையும் சிறிலங்கா அரசால் வெளிவிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் உயர்ஸ்தானிகர் செப்டம்பர் மாத அமர்வின்போது சிறிலங்காவில் நடைபெற்றது திட்டமிடப்பட்ட  குற்றங்கள் என்றும் இந்தக் குற்றங்கள் சர்வதேச குற்றத்துக்கு அமைவாகவே உள்ளது என்றும் குற்றங்களை விபரமாக கூறி இருந்தாலும், மனிதவுரிமை சபையின் அங்கத்துவ நாடுகள் முன்வைத்த  பிரேரணையானது, சிறிலங்கா அரசு சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள் போன்றோரை சேர்த்து விசாரணை செய்யவேண்டும் என்பது சரியான தீர்வாக தெரியவில்லை என்பதையும், இப்போது இந்தப் பிரேரணையில் ஏற்றுக்கொண்டதைக் கூட சிறிலங்கா அரசு செய்யத் தயாரில்லை என்பதை சிறிலங்கா அரசின் கூற்றிலும் நடைமுறை செயற்பாட்டிலும் இருந்தே தெரிவதாக குறிப்பிடப்பட்டது. அத்தோடு அனைத்து தமிழ் அமைப்புகளதும், தனிமனிதர்களினதும் தடை, சிறிலங்கா அரசால் நீக்கப்படல் வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களைத் திட்டமிட்டு அவர்களை ஏழ்மை நிலையில் வைத்திருந்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாடே நடைபெறுவதாகவும், தமிழ் ஊர்களின் பெயரை சிங்கள மொழி மாற்றம், தொடர்ச்சியான புத்த விகாரைகளை, புத்த சிலைகளை தமிழ் பிரதேசங்களில் கட்டுவதும் தமிழ் மக்களை அவர்கள் தாயக பிரதேசத்தில் இருந்து வெளியேற்றி விட்டு சிங்கள மயமாக்கல் திட்டமிடப்பட்டு நடைபெறுவதாகவும் மேலும் கூறப்பட்டது.

ஸ்ராஸ்பேக்கில் இருந்து கலந்துகொண்ட ஐரோப்பிய தமிழர் ஒன்றியப் பிரதிநிதி, ஆட்சிமாற்றம் நடைபெற்றாலும் தமிழ் மக்கள் எந்த நன்மையும் பெறவில்லை என்றும் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றாலும் அதனால் தமிழ் மக்கள் நலன் பெறவில்லை என்றும் கூறினார்.

 தொடர்ந்து  அங்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் பாலியல் வன்முறைகள் நடப்பதாகவும் தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதாகவும், தற்கொலைகளும் நடைபெற்ற சித்திரவதை, கொடுமைகளை வெளியில் சொல்ல முடியாமல் நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பிரதிநிதி குறிப்பிடுகையில் பிரான்சில் நடைபெற்ற அரசியல் கொலைகளின் குற்றவாளிகளை இன்னும் அடையாளப்படுத்த முடியவில்லை அவர்கள் தண்டிக்கப்படவில்லை யென்றும் இங்கு அரசியல் பணிகளைச் செய்யும் பிரதிநிதிகளுக்கு அச்சுறுத்தல் விடப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டது.

இறுதியாக ஈழத் தமிழரின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் பேசும்போதும் தாம் பல தடவை இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சுடன் பேசியிருப்பதாகவும், பிரான்சு அரசு சிறி லங்கா விடயத்தில் அதிமுக்கிய பங்கை எடுக்கவேண்டும் என்பதை தான் வலியுறுத்துவதாகவும் நாம் கூறிய கூற்றுக்களையும் கையளித்த பிரேரணையையும் பிரஞ்சு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார்.

செய்தி : தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here