காணாமற்போனோர் குறித்து யாழ்ப்பாணத்தில் ஆணைக்குழு முன் உறவினர்கள் கண்ணீர் சாட்சியம்!

0
113

missing-sitting-jaffna-111215-seithy-1-300x171காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு யாழ். கச்சேரியில் இன்று நடைபெற்றது. இன்றைய தினம் 235 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், 165 பேர் மாத்திரமே சாட்சியளிக்க வருகை தந்திருந்ததாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்தார்.

இன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக வருகைத் தந்த அனைவரது சாட்சியங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், அதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, யாழ். கச்சேரியில் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாழ். நகரில் நாளைய தினம் மாத்திரமே சாட்சி விசாரணைகள் இடம்பெறும் எனவும், நாளை மறுதினம் பருத்தித்துரையில் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறினார்.

இதனிடையே, இராணுவத்தினர் எனது இரு மகன்களையும் பிடித்துச் சென்று இன்று வரை தகவல் எதுவும் தெரியாது என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மூத்த மகனான கருப்பன் பாலகிருஸ்ணன் என்பவரை மணியந்தோட்டத்தில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றது. இதனை இவரின் சித்தப்பா நேரில் கண்டுள்ளார். அவர் சாட்சியமளிக்க எங்கும் போக தயார் என்றும் கூறியிருக்கிறார்.

அதேபோல் 1996ஆம் ஆண்டு ஜுலை மாதம் கடற்தொழிலில் ஈடுபட்டு வீடு திரும்பும் வழியில் எனது இளைய மகன் கருப்பன் சுரேஸ் கொழும்புத் துறையில் வைத்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டதாகவும் குறித்த பகுதியால் சென்றவர்கள் நேரில் பார்த்ததாக எனக்கு தெரிவித்தனர். இரு மகன்களையும் இராணுவ முகாம்கள் எல்லாம் தேடி அலைந்தோம் ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இன்று வரை அவர்கள் பற்றி எதுவும் எமக்கு தெரியாது. எமக்கு எந்தவிதமான நஸ்ட ஈடுகளும் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வந்தால் மட்டும் போதும். கடவுளை நம்பிக் கொண்டு இருமகன்களும் வருவார் என்ற ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்று தாயார் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

அதேவேளை, 2009 மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது மகள் குடும்பத்தை இதுவரை காணவில்லை என யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு முன்னால் தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.

எனது மகளான சசிகலா, மருமகன் பரமேஸ்வரன், பேரன் பிரதீபன், பேத்தி பிரியாளினி, அதுமட்டுமல்லாது ஏழு வயது நிரம்பிய பேரன் பிறை அழகன் போன்றோர் இறுதிக்கட்டப் போரில் வட்டுவாகலில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களை இராணுவத்தினர் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்றதாக சிலர் எனக்கு தெரிவித்தனர். அத்துடன் எனது மகளின் குடும்பத்துடன் 10 குடும்பங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து அவர்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக சிலர் குறிப்பிட்டனர். அதன்பின்னர் நாங்கள் தேடி அலையாத இடம்இல்லை. இராணுவ முகாம்கள் எல்லாம் அவர்களை தேடி அலைந்தும் அவர்கள் தொடர்பில் எந்தவித பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எமக்கு கடவுள் தான் வழிகாட்ட வேண்டும் கடவுளின் அருளால் எனது மகள் குடும்பம் திரும்பி என்னிடம் வரும் என்று தாயார் சாட்சியத்தில் தெரிவித்தார்.

அதேவேளை, கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது கணவர் இறந்துவிட்டதாக நீதிமன்றில் மரண சான்றிதழ் தந்தார்கள் என அவரது மனைவி காந்தி யாழினி,ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். “அல்லைப்பிட்டி பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின்போது, யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர், எனது கணவர் செல்வானந்தம் காந்தி 2006 ஓகஸ்ட் 15 ஆம் திகதி கடற்படையினரால் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டார்.

வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்றவரை அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் வைத்து கடத்திச் சென்றார்கள். கடற்படை முகாமில் எனது கணவரை வைத்திருந்த போது அதனை கண்ட சிலர் குறிப்பிட்டனர். கடற்படை முகாமில் கேட்ட போது அவர் சென்றுவிட்டதாக கூறினர். பிறகு பொலிஸ் நிலையத்தில் தேடினோம். ஆனால் கிடைக்காத நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்து மரண சான்றிதழ் எடுக்கப்பட்டுள்ளது.எனது கணவர் இறந்துவிட்டார் என்று மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தாலும், அவர் உயிருடன் தான் இருக்கின்றார் என நினைக்கின்றேன். எனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கேட்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here