15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024).
காவியத் தலைவன்
ஓவியம் ஒன்று வரைந்தாராம்
அதற்கு வர்ணங்கள் தீட்டி
சொர்ணம் என்று பெயர் சூட்டினாராம்
நீங்கள் பிறந்தீர்களாம்!
நீங்கள் சொன்ன கதை!
படுக்கை நேரக் கதைகளும் தலைவர் மாமாவைப் பற்றியதும் தமிழீழத்தைப் பற்றியதும், மாவீரர்களைப் பற்றியதும் தான். ஓர் இரண்டு முறை உங்கள் மடியில் அமர்ந்து புத்தகக் கதைகள் கேட்டதைத் தவிர.’அப்பாவ நல்லாப் பாருங்கொ இதுதான் கடைசியா இருக்கும் போல ‘ இந்த வார்த்தைகள் என்னைப் பலமுறை கூறுபோட்டுப் போனதுண்டு. பல முறை அழுகை வரும் ஆனால் அழுததில்லை ஏனென்றால் உங்களுக்குப் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் அந்த ஒற்றை அணைப்பின் கதகதப்பிற்காய்க் காத்திருந்தோம் உங்களை மீண்டும் காணும் வரை. வாகனச் சத்தம் கேட்டு அப்பா வாறார் எண்டு பலமுறை ஏமாந்ததுண்டு. விரல் விட்டு எண்ணும் நாட்களைத்தான் நாங்கள் உங்களோடு செலவிட்டிருக்கிறோம். எங்களுக்கும் அப்பாவோடு எப்படி எப்படியோ வாழவேண்டும் என்ற ஆசைகள் இருந்தன . அதற்கு நீங்கள் கொடுத்த மருந்து தமிழீழ ஆசை. ‘எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைக்கும் அண்டைக்கு நான் உங்களுக்கு அப்பாவா மட்டும் வருவன்’ என்று சொல்லியே சமாதானம் செய்து விடுவீர்கள்.
நீங்கள் ஒரு குழந்தை போலத்தான் எங்களுடன் விளையாடுவீர்கள். இத்தனை ஆண்டுகள் எப்படிக் கடந்தது என்று தெரியவில்லை. நீங்கள் இல்லாமல் நாங்கள் பெற்ற துன்பங்கள் ஏராளம். ஆனால் ஈழத்திலே அப்பாக்களைப் பிரிந்த எல்லாப் பிள்ளைகளும் இதைத்தான் அனுபவிப்பார்கள் என்று சொல்லி அம்மா எங்களைச் சாதாரணமாகக் கடக்க வைப்பார். இருப்பினும் நீங்கள் வாழ்ந்த காலத்தில் கூட ஒரு சாதாரண அப்பா பிள்ளைகளுக்கான உறவைப் பரிமாறிக் கொள்ள நீங்கள் எங்களுக்கு அவகாசம் தந்ததே இல்லையே! உங்களின் கடமையை நாங்கள் அறிவோம்!
ஆனால் குழந்தைகளாய் நாங்கள் பெற்ற ஏக்கத்தை ஏங்கே தேடுவது ?
உடைந்து போன உங்கள் கால்களுக்கு மருந்து கட்ட மாமாக்கள் வந்த வேளை. தாங்கள் எழும்பி வெளியில் செல்ல முற்பட்டோம். ‘ இருக்கட்டும் அவையள் பாத்து உறுதிபெறட்டும் ‘ என்று சொல்லி எங்களைப் பாக்க வைச்சனிங்கள். நாங்கள் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதில் உறுதிபூண்ட மனிதன் நீங்கள்.
அப்பாவாக உங்களை அருகிருந்து உணர்ந்ததைக் காட்டிலும் தலைவர் மாமாவையும் தாய் மண்ணையும் நேசிக்கிற போராளியாகத்தான் அதிகமாகக் கண்டிருக்கிறோம். அதனால்தான் அக்காவும் உங்களோடு மாவீரராய் துயில் கொள்கிறாள். நீங்கள் புகட்டி வளர்த்த பாடங்களை நாங்கள் மறக்கவில்லை. அண்ணன் அண்ணன் என்று உச்சரித்தமனிதன், எக்கணமும் தமிழீழத்தை சுவாசித்த மூச்சுக் காற்று, உங்களின் பிள்ளைகள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இழப்பில் பெருமைப்படுகிற இன்னல்களை யார் அறிவார்? அப்பா என்று உங்களை அழைத்துவிடவும் அக்கா என்று எம் உயிரானவளை ஒரு முறை அணைத்து விடவும் ஆசையாகத் தான் இருக்கிறது. வரிகளில் அடக்க முடியாத மாவீரம் எங்கள் இரத்தத்தில் பாதியென்று சொல்லுகிற நிலையில் கூட நாங்கள் இல்லை. உங்களின் கடைசி முத்ததின் ஈரம் காயவில்லை. அக்காவின் கடைசிப் பார்வை கண் விட்டு அகலவில்லை!
இன்று பட்டுப் போகிற வாழ்க்கையும்
தொட்டுப் போகிற உங்கள் நினைவுகளும்
ஏன் எம் மண்ணை விட்டுச் சென்றீர்கள் என்று எம்மிடம் கேள்வி கேட்கிறது……
மாமாக்கள் போட்ட பிச்சை அப்பாவின் உயிர் என்பீர்கள். களத்தில் வீழ்ந்த தம்பிகளை நீங்கள் எடுத்துக்காட்டாக்கி எமை வளர்த்தீர்கள். தேவிபுரச் சமரில் இருகால்களும் உடைந்து நீங்கள் குப்பி ஏந்திய போது அதைப் பறித்த வேந்தன் அண்ணாவை நாங்கள் மறக்கவில்லை. அந்தச் சமரில் தன் தளபதியை எப்படியேனும் காப்பாற்றிவிட வேண்டும் என்று உங்களை மாரிலும் தோழிலும் தூக்கி வந்த மைந்தன் மாமா. நாங்கள் இருக்கும் வரை அண்ணைக்கு ஒண்டும் நடக்காது என்று சொன்ன உங்கள் உற்ற தம்பி. உங்களோடே கண்களை மூடிப் போனார். கடைசியில் அழைத்தீர்களாம் மைந்தன் என்று. 13 ஆண்டுகள் உங்களோடு பயணித்த மைந்தன் மாமாவையும் நாங்கள் இழந்து நின்றும் அன்று (15.05.2009). என் தந்தையைக் காப்பாற்ற களங்களில் உயிர் நீர்த்த அத்தனை மாவீரர்களையும் கண்ணீரோடு வணங்குகிறேன். அவர்களின் குடும்பங்களை நன்றியுணர்வோடு கைகள் பற்றுகிறேன். மாவீரர்களின் உறுமல்கள் ஓனாய்களின் ஊளையை விரட்டி அடிக்கட்டும்.
வீரவணக்கம் மாவீரவணக்கம்
வல்லமை தாருங்கள் அப்பா…………
மாட்டேன் என்று சொல்ல மானம் இருக்கிறது மறப்பேன் என்று சொல்ல மனசு இல்லையே என் ஈழத்தாயே!!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அ.வி.முகிலினி