‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள்: வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் !

0
155

CVr9VxpW4AA8ky9[1]‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் – குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு வலியுறுத்தி…வவுனியாவில் கவனவீர்ப்பு போராட்டம் !!!

சர்வதேச மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடர்ந்து மனித மாண்புகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும் சிறீலங்காவை, பூகோளப்பந்தில் அடையாளப்படுத்த புதிய ஆட்சியாளர்களும் – தமிழ் மக்கள் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்த அரசியல் பிரதிநிதிகளும் கடுமையாக உழைத்துவரும் இன்றைய அரசியல் சூழலில்,

நாளை மறுநாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 அன்று, சிறீலங்கா அரசின் ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் – குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்குமாறு வலியுறுத்தி, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடிக்கண்டறியும் குழுவும், வவுனியா பிரஜைகள் குழுவும் கூட்டாக கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

டிசம்பர் 10 அன்று, வவுனியா மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10.00 மணிக்கு நடத்தவுள்ள குறித்த கவனவீர்ப்பு போராட்டம் தொடர்பில், காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடிக்கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில்,
‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும்.
‘அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்’ என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
2009ம் வருடம் மே மாதம் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, முப்படைகளிடமும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்ட அல்லது கைதுசெய்யப்பட்ட போராளிக்குடும்பங்களும் – அந்தக்குடும்பங்களின் பிள்ளைகளும் உயிருடன் இருக்கின்றார்களா? என்பது தொடர்பில் அறிவிக்க வேண்டும்.
‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். ‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும்.

இவ்வாறு தமிழ்மொழி பேசும் மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் தேசிய பேரிடர் பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறும் – தீர்வளிக்குமாறும் சிறீலங்கா அரசை வலியுறுத்தியே, சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய டிசம்பர் 10 அன்று, குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தை நடத்துவதாகவும்,

சர்வதேச மனித உரிமைப்பிரகடனங்களை வழித்தொடர்ந்து மனித மாண்புகளுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளை பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும் சிறீலங்காவை, பூகோளப்பந்தில் அடையாளப்படுத்த புதிய ஆட்சியாளர்களும் – தமிழ் மக்கள் தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்த அரசியல் பிரதிநிதிகளும் கடுமையாக உழைத்துவரும் இன்றைய அரசியல் சூழலில், உண்மையை வெளிப்படுத்த குறித்த கவனவீர்ப்பு போராட்டம் முக்கியத்துவம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த கவனவீர்ப்பு போராட்டத்தில், நாடு முழுவதுமுள்ள சிவில் சமுக, மனித உரிமைகள் – மக்கள் நலனுக்கான அரசியல் செயல்பாட்டாளர்கள், மதப்பிரமுகர்கள், அருள்தந்தைகள், அருள்சகோதரிகள், அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள், மாணவர்கள், சமுக ஆர்வலர்கள், மக்கள் நலன் விரும்பிகள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here