கடந்த 27.04.2024 அன்று மருத்துவகுழாம் ஒன்று பிரான்சு தேசத்திலிருந்து நம் தாயகம் நோக்கி வந்திருந்திருந்தார்கள்.
5 பேரைக்கொண்ட இந்தக் குழாம் மிக நேர்த்தியான முறையில் தங்களுடைய வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்கள். 29.04.2024 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்திய சாலையான மாஞ்சோலை வைத்தியசாலையைப் பார்வையிட்டார்கள். அங்கு பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் அனைவருடனும் கலந்துரையாடினார்கள்.
தொடர்ச்சியாக மிகவும் பின்தங்கிய கிராமங்களான தண்டுவான் அரை ஏக்கர் திட்டம், கரடிப்பிலவு, பழம்பாசி, இத்திமடு, தட்டாமலை ஆகிய கிராமங்களுடன் வாழும் மக்களுடன் கலந்துரையாடப்பட்டது. இந்த மருத்துவ குழாம் ஊடாக பல்வேறுபட்ட பிரச்சனைகளை அறியக் கூடியதாக இருக்கின்றது. 30.04.2024 முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி அவர்களை சந்தித்து கலந்துரையாடப்பட்டு வைத்தியசாலை பார்வையிடப்பட்டது. தாதிகள் உடனான சந்திப்பும் இடம் பெற்றது. 01.05.2024 வடமாகாண சுகாதாரப்பணிப்பாளர் திரு. சத்தியமூர்த்தி அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையும் பார்வையிடப்பட்டது. 02.05.2024 பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. சிறீதரன் மற்றும் திரு. கஜேந்திரன் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது. தொடர்ந்து கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிகள் அவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையும், நோயாளிகளும், இடங்களும் பார்வையிடப்பட்டது.
03.05.2024 முல்லைத்தீவு மாவட்ட பிராந்தியவைத்திய அதிகாரி வைத்தியர் சுதர்சன் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரி நிதர்சன் ஆகியோருடனான சந்திப்பு இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து மருத்துவ குழாம் தாம் கண்டதும், பரிசோதித்த தகவல்களையும் வைத்து ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு ( SL RC ) ) அதிகாரிகளும் உடன்பட்டனர். ஒவ்வொரு மாதமும் பின்தங்கிய கிராமங்களை சென்று மக்களை சந்தித்து அவர்களை பரிசோதித்து அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கும் SL RC அமைப்பினர் முன் வந்துள்ளனர். இத்திட்டத்தை பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மருத்துவகுழாமும் வரவேற்றார்கள்.
தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மருந்துப்பொருட்கள் வைத்தியர் சுதர்சன் ( SL RC ) , நிதர்சன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன. இச்செயல் திட்டத்தின் ஊடாக எமது தாயக மக்கள் பல்வேறுபட்ட வழிகளில் பலனைப்பெறுவார்கள் என நாம் எண்ணுகிறோம். தொடர்ந்து வருகைத்தந்திருந்த மருத்துவகுழாம் 2009 இல் மாபெரும் இனஅழிப்புக்கு உள்ளான முள்ளிவாய்க்கால் மண்ணுக்குச் சென்று (04.05.2024 அன்று) தமது வணக்கத்தையும் செய்திருந்தனர்.
05.05.2024 இல் தங்கள் நாட்டை சென்றடைந்தார்கள். இவர்களின் வருகையானது கடந்த 15 ஆண்டுகள் மிகப்பெரும் அவலத்தை கண்முன்னே அனுபவித்து சொல்ல முடியாத துன்பத்தையும், மனவேதனைகளையும் சந்தித்துக் கொண்டிருந்த மக்களும், இன்று வளர்ந்து வரும் சமுதாயமும் இவர்கள் போன்றவர்களின் மனிதநேய வருகையும், எங்களை நினைத்துப்பார்க்கும் மனிதர்களும் வருகையும் மிகுந்த நம்பிக்கையை தருவதாகவும் உள்ளது என்றும் மக்களின் கருத்துகள் அமைந்திருந்தன. இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள பல்துறை சார்ந்தவர்கள் எம்மைப்போன்ற அடிப்படை வசதியற்று வாழும் தங்கள் இனத்தை மனிதநேய ரீதியிலாவது வந்துபார்க்க மாட்டார்களா என்ற ஏக்கம் இருந்தது என்றும் கடந்த மாதம் பிரான்சு நாட்டில் இருந்து ஒரு பல்கலைக்கழக தமிழ் மாணவர் வந்து எமது இளம் தலைமுறையினருடனும், பெரியவர்களுடனும் பழகியதும் பேசியதும் எமது நிலைமைகளை ஆர்வத்துடன் அறிந்து கொண்டு சென்றதும் பெரிய சந்தோசத்தையும், நம்பிக்கையையும் தருவதாகவும் பெரியவர்கள் தெரிவித்திருந்தனர்.
(தாயகத்திலிருந்து எரிமலைக்கு மனிதநேயப் பணியாளா் – ஜீவன்)