
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்களின் தேர்ந்த எழுத்துக்களின் தொகுப்பான “பேசுவோம் போரிடுவோம்” நூல் வெளியீட்டு நிகழ்வு பிரான்சில் இன்று இடம்பெற்றது. தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
அனைத்துலகத் தொடர்பகம் வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப் பிரிவினால் இன்று (09.05.2024) வியாழக்கிழமை பி.ப.15.00 மணிக்கு பொபினிப் பகுதியில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஈகைச்சுடரினை 02.04.2009 பெட்டிச்சமரில் வீரச்சாவடைந்த மேஜர் பாரதி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.செவ்வேள் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூல் அறிமுக உரையை திரு ஜஸ்ரின் தம்பிராஜா அவர்களும் நூல் மதிப்பீட்டு உரையை திரு.விநாசித்தம்பி மோகனதாஸ் அவர்களும் ஆற்றியிருந்தன்ர்.
தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.ஜெகன் அவர்கள் நூலின் முதற்பிரதியை வெளியிட்டுவைக்க ஈழநாதம் நாளிதழ் பிரதம ஆசிரியர் திரு.ஜெயராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அணிவகுத்து அனைவரும் நூலினைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. திரான்சி தமிழ்ச்சோலை, வெர்சைல் தமிழ்ச்சோலை, ஒள்னேசுபுவா தமிழ்ச்சோலை ஆகியவற்றின் மாணவியரின் எழுச்சி நடனங்கள் மற்றும் தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் எழுச்சி கீதங்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன.
நிறைவாக நன்றியுரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி முகுந்தினி அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊகப்பிரிவு)






















