திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வியாங்குளம் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காவலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். பட்டணம் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அருணாச்சலம் டேவிட் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்று மாலை அலுவலகத்துக்கு விளக்கேற்றிவிட்டு வருவதாக கூறிச் சென்றவர் இரவு வரை வீடு திரும்பாததையடுத்து, அவருடைய மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், திணைக்களத்தின் காவலாளி அறையிலிருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.