தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் பூராவும் வாழும் ஈழத் தமிழ் மக்களை வரைவான உதவிகளை வழங்க முன்வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் புலம்பெயர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஈழத் தமிழ் மக்களுக்காக கடந்த நான்கு தசாப்தங்களாக குரல்கொடுத்துவரும் தொப்புள்கொடி உறவுகளான எம் தமிழக உறவுகள் மிகப் பயங்கரமான வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மிக அமைதியான முறையில் பெருகிய வெள்ளம் தமிழகத்தின் ஒருபகுதி மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அழித்துள்ளது. காலம் காலமாக இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தி உழைத்து கட்டிய வீடுகள், சொத்துக்கள் பெறுமதி மிக்க ஆவணங்கள் அனைத்தும் அழிந்து நாசமாகியுள்ளது.
இந்த அழிவில் இருந்து எம் தமிழ் உறவுகளை மீட்டெடுக்க அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு தாராள உதவிகளை அள்ளிவழங்கி அந்த மக்களை அழிவிலிருந்து மீட்டெடுத்து இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்வரவேண்டும். இந்த உதவியை செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.