கடற்படையின் வாகனம் மோதி பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று காலை எட்டுமணியளவில் நாரந்தனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து சம்பவத்தினால் கடற்படைக்கும் பொது மக்களிற்கிடையிலும் யாழ்.போதனா வைத்திய சாலையில் முறுகல் நிலை காணப்பட்டது.
இவ்விபத்தில் வேலணை மேற்கு நடராச வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி கற்கும் உதயகுமார் உஷாந்தினி [வயது 16] என்ற மாணவியே உயிரிழந்தவராவர். பிரஸ்தாப மாணவி நாரந்தனை வடக்கில் வசித்து வரும் நிலையில், நாரந்தனை-வேலணை ஊடாக வேலணையில் உள்ள பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று வருவது வழக்கம்.
வழமைபோல நேற்றைய தினமும் குறித்த மாணவி தற்போது மழை காலம் என்பதனால், நேற்றைய தினம் பாடசாலைக்கென நேரத்துக்கே வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். இவ்வாறு செல்லும் போது மாணவி செல்லும் வீதியில் பாடசாலைக்கு அண்மித்த இடத்திலேயே விபத்து சம்பவம் இடம்பெற்று உள்ளது.
விபத்து இடம்பெற்ற பின்னர் கடற்படையினரே தமது வாகனத்தில் படுகாயமடைந்த சிறுமியை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். எனினும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை உட் தகவல்கள் கூறுகின்றன.
விபத்தினை ஏற்படுத்திய கடற்படையின் வாகனம் எங்கு எவ்வாறு மாணவியை மோதியது என்பது குறித்து நேற்று மதியம் வரையில் யாருக்கும் தெரியாத நிலையே காணப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்டதன் பின்னரே வீட்டார், பாடசாலை சமூகத்தினர் மற்றும் அயலவர்களுக்கு மாணவி உயிரிழந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
கூலித்தொழிலாளியான தந்தையை கொண்ட மேற்படி மாணவியின் குடும்பம் வறுமையான குடும்பம் எனவும் குடும்பத்தில் மாணவியே முதலாவது பிள்ளை, மற்றும் ஒரு சகோதரர், சகோதரி ஆகியோர் உள்ளதாகவும் எதிர்வரும் பத்தாம் திகதி மாணவியின் பிறந்த நாள் வருகின்றது எனவும் உறவினர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கூறுகின்றார்.
மேலும் கடற்படையின் வாகனம் மிக வேகமாக வந்தமையினாலேயே மாணவி உயிரிழந்ததாக மாணவியின் உறவினர் ஒருவர் வலம்புரியிடம் கூறினார். சமபவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வரும் ஊர்காவற்துறை பொலிசார் விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான என்.எம்.டி குமார எனும் கடற்படை சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளனர். இவருக்கு எதிர்வரும் பதினேழாம் திகதி வரை ஊர்காவற்துறை நீதிமன்றம் விளக்கமறியல் விதித்துள்ளது