சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தற்போது மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளதால். நிலைமை எப்போது சீரடையும் என மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.சென்னையில் தற்போது பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் துவங்கியுள்ளதால் மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் சென்னையில் ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் பெய்ய துவங்கியுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தரமணி, திருவான்மியூர், வேளச்சேரி, மயிலாப்பூர், எழும்பூர், கிண்டி, பட்டினப்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம், தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம், மந்தைவெளி, புழுதிவாக்கம், மேடவாக்கம், நங்கநல்லூர், எழும்பூர், ஆலந்தூர் , ஆவடி, பட்டாமிராம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ய துவங்கியுள்ளது.இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரியில் கன மழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கையாக கடலூருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்த கனமழைக்கு மா,பலா,வாழை, மரவல்லி கிழங்கு உள்ளிட்ட பணப்பயிர்கள் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. ஏற்கனவே மூன்று பெருமழையைச் சந்தித்து வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் மேற்கொண்டு வரும் மழையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வியும், மழை ஓய்ந்தது என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களிடையே மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது பீதியை கிளப்பியுள்ளது.