04.12.2015
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு விடுக்கும் அவசர, அவசிய உதவி வேண்டுகோள்!
தாய்த் தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் சென்னை மாநகரமும் அதனைச் சுற்றிய பிரதேசங்களும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டு இரண்டு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு போர்க்கால அடிப்படையில் சகல நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எம் தாய்த் தமிழக தொப்புள்கொடி உறவுகள் சொல்லொணாத் துயரத்திலும், வேதனையிலும், ஆற்றாமையிலும் மூழ்கி இருகின்றார்கள். இவர்களுடைய துயரைத் துடைப்பது உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மிகப் பெரிய கடமையாகும்.
போராட்டகாலத்தில் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் வீடு, நிலம், உடமைகள், உயிர் இழப்புகளைச் சந்தித்து அகதிகளாக இருந்து அதன் பெருவலியை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் இம்மக்களின் வலியையும், வேதனையையும் எம்மால் நன்கு உணரமுடியும். இவர்களுக்கான உதவியை வழங்கிட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு ஒழுங்கினை மேற்கொண்டுள்ளது.
இதற்கான உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் அனைத்துக் கட்டமைப்புகளும் உடன்கவனத்தில் கொண்டு உதவிட முன்வரல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, பிரான்சில் இயங்கும் இதர தமிழ் அமைப்புகள், கோவில்கள், பழையமாணவர் சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள், பொது மக்கள் அனைவரையும் தம்மால்லான உதவிகளை அல்லற்படும் மக்களுக்கு வழங்குமாறு வேண்டிக் கொள்கிறது.
தொடர்புகள்: 01 43 15 04 21
06 29 23 69 14
CCT France
116 Rue de Belleville
Paris 19
Metro Line 11 Jourdain