இன்றைய தொழிலாளர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த ஓவியர் புகழேந்தி அவர்கள் அமெரிக்காவில் மே நாள் தொடர்பாக தான் நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மே நாள் போராளிகளுக்கான நினைவுச் சின்னம்.
2002 ஆம் ஆண்டு ஜூலையில் என் அமெரிக்கப் பயணத்தில் ஒரு நாள்…..சிக்காகோவில் ….
முக்கியமான இரண்டு இடங்களுக்கு தங்களை அழைத்துச் செல்கின்றேன் என்று அண்ணன் விசுவநாதன் அவருடைய மகிழுந்தில் அழைத்துச் சென்றார். பயணிக்கும் போதே, மே நாள் பற்றிய வரலாறு உங்களுக்குத்தெரியுமா?என்றுக் கேட்டார்.
மே நாள் கொண்டாடப்படுவதன் காரணமும் அது தொடங்கியது அமெரிக்கா என்றும் தெரியும் என்றேன்.
அந்த இடம் நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று அண்ணன் விசுவநாதன் சொன்னவுடன் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.அந்த இரத்தம் தோய்ந்த இடத்தைப் பார்க்கப் போகிறோமே என்ற வேதனை ஒருபுறமும், ஒரு வரலாற்றுசிறப்புமிக்க இடத்தைக் காணப்போகிறோமே என்ற மகிழ்ச்சி மறுபுறமும் என்னை ஆட்கொண்டன.
ஹே-மார்கெட் –ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை என்பதற்காக போராட்டம் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க இடம்.அந்த இடத்தில் போய் நின்றவுடன் உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரைக்கும் சிலிர்த்தது.ஒரு நிமிடம் கண்களை மூடி அந்த போராளிகளுக்கு என் அகவணக்கத்தை செலுத்தினேன்……..
அதற்கான நினைவுச் சின்னமாகஅற்புதமான சிற்பத்தை வேறொரு இடத்தில் அமைத்திருக்கிறார்கள். அப்போது என்னிடம் ஒளிப்படக் கருவி இல்லை. அதனால் அச்சிற்பத்தை நேரில் பார்த்து வரைந்து வந்தேன்.அந்த ஓவியம் இதுதான்….
ஓவியர் புகழேந்தி.