.
தாய்த் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் காரணமாக இடைவிடாது பெய்துவரும் கனமழை, வெள்ளச் சேதத்தில் சிக்குண்டு இன்னல்களுக்குள்ளாகி நிற்கும் தாய்த் தமிழக உறவுகளின் நிலை எம்மை நிலைகொள்ளா வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இன அழிப்பு யுத்தத்தின் கொடூர கரங்களால் எம் உடல்களில் காயங்கள் ஏற்பட்ட போது உணர்வுகளால் வலிகளை சுமந்து நின்று.. படுகொலைக்குள்ளாகி நாம் செத்து வீழ்ந்த போது தவித்து நின்று.. தொப்புள் கொடி உறவின் தார்ப்பரியத்தை வெளிப்படுத்திய தாய்த் தமிழக உறவுகளுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் பெருந்துயர் உலகெங்கும் பரந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களாகிய எம்மை ஆற்றொனாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
வரலாறுகாணாத பெரு மழை மற்றும் வெள்ளச்சேதத்தினால் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. எதிர்பாராத இவ் அனர்த்தத்தினால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளமையானது பாதிப்பின் உச்சத்தை வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
திடீரென எவருமே எதிர்பாராத் தருணத்தில் பெய்துவரும் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு என்றுமில்லாத அழிவுகளையும் இடர்பாடுகளையும் சந்தித்து பல்வேறுபட்ட இன்னல்களுக்குள்ளாகி தவித்துவரும் தாய்த் தமிழக உறவுகளின் துயரில் நாமும் உணர்வால் பங்கேற்பதுடன் பகலவனைக் கண்ட பனித்துளிபோல் இத்துயரெல்லாம் நீங்கப்பெற்று விரைவில் இயல்பு நிலைக்கு மீண்டுவர எமது தார்மீக ஆதரவினையும் உலகத் தமிழர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை