ஐயா ம.க.ஈழவேந்தன் காலமானதை அறிந்து, தாய்த் தமிழகத்தில் இருந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் ஒரு நினைவைப் பகிர்ந்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு..
90களின் தொடக்கத்தில் எனக்கு அறிமுகமானார். அப்போது தமிழ்நாட்டில் வசித்துவந்தார். தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவை திரட்டும் பணியில் தொய்வில்லாமல் ஈடுபட்டு வந்தார். சிறந்த பேச்சாளர். தமிழீழம் குறித்த வரலாற்று செய்திகளை தரவுகளோடு மக்களுக்கு புரியும் வகையில் உரையாற்றுவார். அவருடைய பல உரைகளை கேட்டிருக்கிறேன்
2000 ஆவது ஆண்டு சென்னையில் நடைபெற்ற என்னுடைய “உறங்கா நிறங்கள்” ஓவியக் காட்சிக்கு பார்வையாளராக வருகைதந்து என்னுடைய படைப்புகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு என் இல்லத்திற்கும் வருகைதந்து கதைத்து செல்வது வழக்கம்.
2000 ஆவது ஆண்டு திசம்பரில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், 2004 ஆம் ஆண்டு என்னுடைய முதல் தமிழீழப் பயணத்தில் கொழும்பில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர். கொழும்பு, கிளிசொச்சி ஆகிய இடங்களில் என்னோடு நான்கு நாட்கள் இருந்தார். அப்பயணத்தில் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அவருடைய இல்லத்திற்கு சென்று அவரையும் அவர் மனைவியையும் சந்தித்தேன்.
2005 ஆம் ஆண்டு தலைவரின் விருப்பத்திற்கிணங்க கிளிநொச்சியில் இயக்கத்தின் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு இயக்கத்தால் வெளியிடப்பட்ட “புயலின் நிறங்கள்” ஓவிய நூலின் வெளியீட்டு நிகழ்வு 30.11.2005 அன்று யாழ்ப்பாணம், யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றபோது நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
அண்ணனுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மனிதர். அவர் கனடா சென்றபிறகு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. இறுதி வரை தமிழீழமே அவர் மூச்சாக இருந்தது.
தமிழீழ வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்பார்.
என் நினைவுகளிலும்…
ஓவியர் புகழேந்தி
29.04.2024
முதல் படம்: கொழும்பில்..
இரண்டாம் படம் :தமிழீழம் விசுவமடு