தமிழகத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் பல லட்சம் மக்களை காப்பற்ற முடியாமல், ராணுவம் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில்மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கடந்த 20 நாட்களுக்கு முன் மழை பெய்தது. தொடர் மழையால், தென் பகுதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது. பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். முடிச்சூர், தாம்பரம், வேளச்சேரி, மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் வெள்ளம் வடியாமல் இருந்தன. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியது.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை விடாது கொட்டியது. இதனால் ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரி நிரம்பி வழிந்தது. இப்போது மீண்டும் கொட்டிய தொடர் மழையால், மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஏரிக்கு வர ஆரம்பித்தது. இதனால் செவ்வாய்கிழமை அதிகாலையில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின் 8 ஆயிரம், 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 30 ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டது. இதனால் தாம்பரம், முடிச்சூர், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்கள் தண்ணீரில் மூழ்கின. கீழ்தளம் மட்டுமல்லாது முதல் தளம் வரை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல செம்பரம்பாக்கத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் நகருக்குள் பெய்த மழை மூலம் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் அடையாறு ஆற்றில் பாய்வதாலும் வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றில் இடம் கொள்ளாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்ததால், கரையோரங்களில் உள்ள பல லட்சம் மக்கள் வீடுகளில் மாட்டிக் கொண்டனர். காலையிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டி.வி. இயங்கவில்லை. இதனால் தகவல் தெரியாமல் பலர் மாட்டிக் கொண்டனர். அவர்கள் 2வது மற்றும் 3வது மாடியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்புப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. ஆற்றில் இருந்து சுமார் 100 அடி முதல் 200 அடி தூரம் வரை தண்ணீர் 8 அடி, 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது
இதனால் மீட்பு படையினர் அந்தப் பகுதிகளுக்குள் செல்ல முடியவில்லை. ஓரமாக இருந்த ஒரு சிலர் மட்டும் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். அவர்களும் உடமைகள், பணம், நகைகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது ஆற்றின் ஓரமாக பல லட்சம் மக்கள் வீட்டில் தவித்து வருவதால், அவர்களை மீட்க முடியவில்லை. மீட்பு படையினர் சென்றால் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் ஓரளவு மக்களையே மீட்க முடிகிறது. இதனால் பல லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படுகிறது. பலர் வெள்ளம் வடியும் என்று காத்திருக்கின்றனர். நேற்று மாலை முதல் மழை ஓய்ந்திருந்ததால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர். ஆனால், மீண்டும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
.