மணிப்பூர் மாநிலத்தில் நாராயண்சேனா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் கூகி இனக் குழு மற்றும் சி.ஆர்.பி.எப்., பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலம், பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்சேனா கிராமத்தில் இன்று கூகி இனக் குழு தாக்குதல் நடத்தி உள்ளது. பள்ளத்தாக்கு அருகே, சி.ஆர்.பி.எப்., படை வீரர்கள் தங்கியிருந்த இடத்தை குறி வைத்து, கூகி இனக் குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்ஸ்பெக்டர் ஜாதவ் தாஸ் மற்றும் கான்ஸ்டபிள் அப்தாப் தாஸ் ஆகிய 2 பேர் காயமடைந்தனர். இருவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தில் தேர்தல் பணி முடிந்து, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் கூகி இனக் குழு தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஓராண்டு காலமாக, மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகிறது.