” வடபகுதி மாணவ, மாணவியர் அவதானத்துடன் செயல்பட வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்!

0
175

.db5e2245-9f9c-499a-9ebf-894ab83badf7வடக்கின் மூலதனமாக விளங்கும் கல்வியை குழப்பி அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டமுருங்கன் மகா வித்தியாலய தொழில்நுட்ப பீடக் கட்டிடத் தொகுதி திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

நான் இங்கு நேரடியாக வராத போதிலும் இவ்விடத்தில் வாழக்கூடிய மக்களின் பிரச்சினைகள் பற்றியும் இப்பாடசாலையின் அபிவிருத்தி பற்றியும் செய்திகள் கிடைத்த வண்ணமே இருந்தன.

எனினும் குறைகளை நேரடியாகக் கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதற்கொரு சந்தர்ப்பம் இன்று கிடைத்துள்ளது. அதற்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பகுதி ஒரு சிறந்த விவசாய பூமியாகவும் நீர்ப்பாசனம் தாராளமாகக் கிடைக்கக் கூடிய வயல் நிலங்களைக் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.

இப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு ஈடாக ஏட்டிக்குப் போட்டியாக கல்வியில் நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவியர் விளையாட்டுத் துறையில் மிகவும் முன்னணியில் இருக்கக் கூடிய உடல் வலுவைக் கொண்டிருக்கின்றார்கள். தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கூட சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இவர்களின் விளையாட்டுத் திறமை வளர்ச்சியடைந்துள்ளது.

கல்வித் துறையிலும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த கா.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி பல மாணவ மாணவியர் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்குத் தேர்வாகி இருப்பதாகவும் அறிகின்றேன்.

இன்று பல பாடசாலைகள் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு, கட்டிடங்களின் பற்றாக்குறை, மாணவர்கள் ஒழுங்கின்மை போன்ற பல காரணங்களினால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன.

இவை தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சுக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி உரிய தீர்வுகளைப்பெற்றுக் கொடுக்க முயற்சிகள் எடுக்கப்படும். இது சம்பந்தமாகச் உங்கள் மாவட்ட மாகாண சபைப் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.

பாடசாலைக் கல்விக் காலம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது ஐந்து வயது தொடக்கம் கா.பொ.த. உயர்தரத்தை எட்டி நிற்கும் வரையான காலப்பகுதியாகும். இக் காலப்பகுதிக்குள் பல மாணவ மாணவியர்கள் வெவ்வேறு துறைகளில் கற்றுத் தேர்ந்து பல்கலைக் கழகங்களுக்குள் புகுந்து விடுகின்றார்கள்.

சிலர் கற்கின்ற காலங்களைத் தவறவிட்டுப் பின்னர் தமது கல்விக்காக அல்லது தாம் இழைத்த தவறுக்காக சதா காலமும் வருந்திக் கிடக்கின்றார்கள்.

‘இளமையிற் கல்’ என்ற ஒளவையார் வாக்குப் படி மாணவ மாணவியர் தமக்குக் கிடைக்கும் மாணவப் பருவம் என்ற இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.

இன்று பாடசாலை மாணவர்களிடையே துர்ப்பழக்கங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தி அம் மாணவர்களைக் கல்வியறிவில் மிகப் பின்தங்கியவர்களாக மாற்றுவதற்கு சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது வடபகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும் அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சதி என்று ஏன் குறிப்பிடுகின்றேன் என நீங்கள் எண்ணக்கூடும்.

மேலை நாடுகளில் போதைப்பொருட் பாவனையை மாணவர்களிடையே புகுத்துவதற்குச் சில மாணவர்களை இதற்கெனத் தேர்ந்தெடுத்து அவர்களைப் போதைப் பொருள் அடிமைகளாக மாற்றிய பின்னர் அவர்கள் மூலமாக ஏனைய மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையைப் பழக்குவதற்கு திட்டமிட்டுஒவ்வொரு அடையாளப்படுத்தப்பட்ட அத்தகைய மாணவனையும் ஒவ்வோர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் புதுமுக மாணவர்களாகச் சேர்த்துக் கொண்டு அவர்கள் மூலமாக இந்தப் போதைப் பொருள் பாவனையை ஏனைய மாணவர்களுக்கு மிகவும் இலகுவாக பழக்குவதற்கு எத்தனிக்கின்றார்கள்.

இதே முறைமை எமது பகுதியிலும் பின்பற்றப்படுவதாக அண்மையில் கிடைக்கப்பெற்ற சில செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. வெளியில் இருந்து வந்து வடமாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நபர்களே இதற்குப் பொறுப்பு என்று கூறப்படுகிறது.

போதைப் பொருள் பாவனையானது புற்றுநோய் உடலில் பரவுவதற்கு ஒப்பானது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது மின்சாரச் சிகிச்சை மூலமாகவோ குணமடையச் செய்து விடலாம்.

ஆனால் நிலைமை முற்றி விட்டால் விளைவுகள் துன்பகரமானதாகவே அமையும். அதே போன்று தான் போதைப் பொருட் பழக்கவழக்கங்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் இப் பழக்கங்கள் திருத்தப்படலாம். இல்லை என்றால் அப் பழக்கத்தின் கோரப் பிடிக்குள் நின்று தப்ப முடியாது.

எனவே தான் நான் செல்கின்ற எல்லாப் பாடசாலைகளிலும் இச் செய்தியை பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் திரும்பத்திரும்ப எடுத்துக் கூறி வருகின்றேன். உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனியுங்கள். அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்ற போது அவர்களின் நடவடிக்கைகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் பிழையான வழிகளில் செல்வது கவனிக்கப்பட்டால் அதற்கான ஏற்ற பரிகாரங்கள் தேடப்படல் வேண்டும். இவ் விடயத்தை நான் இங்கு குறிப்பிடுவதற்கு மேலும் ஒரு காரணம்உள்ளது. உங்கள் கிராமத்திற்கு அண்மையாக காணக் கூடிய ஒரு கிராமத்தில் போதைப் பொருள் மொத்த விற்பனை நடைபெறுவதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டேன்.

எனவே தான் நீங்கள் இவ் விடயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இதனை இங்கு குறிப்பிட்டேன். வர முன் காப்பதே சிறந்தது. போதைப் பொருட் பாவனை பிள்ளைகளிடையே பரவத் தொடங்கி விட்டால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகச் சிரமமும் செலவு மிக்கதாகவும் மாறிவிடும் என அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here