.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்கின்றது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்த உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாக குறைத்தது.
மேலும் இவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அப்போதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன், முருகன் சாந்தன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் மாநில அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இதனையடுத்து குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அத்துடன் இந்த எதிர்ப்பு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையில் 5 நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
அதன்படி தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று வழங்கினர். முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்