விபத்துக்குள்ளான ஏயார் ஏசியா விமானம் ஜாவா கடலின் அடிப்பரப்பில் தலைகீழாக உள்ளமை சோனார் கருவி மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பயணிகளுடன் சென்ற சிங்கப்பூர் ஏயார் ஏசியா விமானம் க்யூ.இ.சட் 8501 ராடாரில் இருந்து மாயமாகிய நிலையில் விமானம் இந்தோனேசியாவில் உள்ள ஜாவா கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலில் 40 சடலங்கள் மிதந்ததாகவும், அவை மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இருப்பினும் 40 பேரின் சடலங்கள் மீட்கப்படவில்லை என்று தற்போது அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் சிப்பந்தி உட்பட 6 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. அந்த சிப்பந்தி 20 வயதாகும் ஹைருன்னிஸா ஹைதர் பவ்சி என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே ஜாவா கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் உடல்களை மீட்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் உயிருடன் மீட்கப்பட வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சோனார் கருவி எடுத்த படங்களில் ஏயார் ஏசியா விமானம் கடலின் தரை மட்டத்தில் தலைகீழாக கிடப்பது தெரிய வந்துள்ளது.