டுபாய், ஓமான், அமீரகம் ஆகிய வளைகுடா நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
உலகின் இரண்டாவது பரபரப்பான டுபாய் விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைப்பட்டன. ஓடுபாதைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. வாகனப் போக்குவரத்துகளும் முடங்கின.
டுபாய் விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த பல விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. விமான ஓடுபாதைகள் தண்ணீரில் மூழ்கின. சாலைகளில் மகிழுந்துகளும் தண்ணீரில் மூழ்கின.
இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. துபாயின் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் வெள்ள நீர் புகுந்திருந்தது. சாலைகள், குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கின. பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் வழியே நீர் உள்ளே புகுந்தது.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமீரகத்தில் உள்ள பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. இன்றும் புயல் வீசக்கூடும் என முன்னறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். பஹ்ரைன் மற்றும் ஓமனிலும் புயலால் வெள்ளம் ஏற்பட்டது. ஓமன் நாட்டில் கனமழை மற்றும் பெருவெள்ளத்திற்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் இடியுடன் கூடிய மழை, பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பல தாழ்வான பகுதிகள் இன்னும் நீரில் மூழ்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
1,400க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
ஷர்கியா மாகாணத்தின் அல்-முதைபி பகுதியில் உள்ள வாடி வழியாக செல்ல முயன்ற பேருந்து வெள்ளத்தில் மூழ்கியதில் 10 முதல் 15 வயதுக்குட்பட்ட 10 பள்ளி மாணவர்களும் ஒரு பெரியவரும் கொல்லப்பட்டனர். மேலும் 3 குழந்தைகள் மற்றும் பேருந்து ஓட்டுநரும் மீட்கப்பட்டனர்.
ஓமானின் இரண்டு வடக்குப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் 180 மிமீ மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் மற்ற எட்டு பகுதிகளில் 120 மிமீக்கும் அதிகமான மழை பெய்துள்ளது என்று தேசிய அவசரகால மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது. ஓமானில் மழைப்பொழிவு குறைவாக உள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு வடக்கில் 150 முதல் 300 மிமீ வரை இருக்கும்.
ஓமனின் வடக்கு அண்டை நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 75 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதிலிருந்து செவ்வாய்கிழமை மிகப்பெரிய மழைப்பொழிவை சந்தித்தது. 4 மணி நேரத்திற்குள் அல்-ஐன் எமிரேட்டில் உள்ள காட்ம் அல்-ஷக்லாவில் 254.8 மிமீ மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.