அனுர குமாரவிடம் சில கேள்விகள் – நிலாந்தன்!

0
87

ஓரு நண்பர்,அவர் ஒரு இலக்கியவாதி,தொலைபேசியில் அழைத்தார். தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அவரைப் பதட்டமடையச் செய்திருப்பதாகத் தெரிந்தது. பொது வேட்பாளர் என்ற தெரிவை அவர் கடுமையாக விமர்சித்தார். இனங்களுக்கு இடையே அது முரண்பாட்டைப் பெருப்பிக்கும் என்ற பொருள்படவும் அவர் கதைத்தார். அதாவது சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சில விமர்சகர்கள் கூறுவதை அவர் பிரதிபலித்தார். அதைவிட முக்கியமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தான் ஜேவிபிக்கு வாக்களித்ததாகவும் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜேவிபிக்கு இருந்த கவர்ச்சியை விடவும் இப்பொழுது குறிப்பாக 2021 இல் நிகழ்ந்த தன்னெழுச்சிப் போராட்டங்களின் பின்னர் ஜேவிபியின் கவர்ச்சி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. எனவே அந்த இலக்கிய நண்பர் இந்த முறையும் ஜேவிபிக்குத்தான் வாக்களிக்க போகின்றார் என்று தெரிகிறது. அவரைப் போன்றவர்களை மயக்கக்கூடிய பேச்சாற்றலும் ஜனவசியமும் அனுரகுமாரடவிம் உண்டுதான்.

யாழ்ப்பாணத்திலும் கனடாவிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் இன முரண்பாடுகள் தொடர்பிலும் இன நல்லிணக்கம் தொடர்பிலும் அனுரகுமார ஆற்றிய உரைகள் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வாதிகள் மத்தியில் அதிகம் கவனிப்பை பெற்றிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு,கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டச் செயற்பாட்டாளரும் ஆகிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்,ஜேவிபியை ஆதரிப்பதன் மூலம் தென்னிலங்கை அரசியலில் தாக்கம் செலுத்த முடியுமா என்று.

அப்பொழுது இருந்ததைவிடவும் இப்பொழுது, ஜேவிபியின் மவுசு கூடிவிட்டது. இரண்டு பிரதான கட்சிகளையும் விட ஜேவிபி பரவாயில்லை என்று சிங்கள மக்கள் மத்தியில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் கருதுகிறது. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் அவ்வாறான எதிர்பார்ப்பு உண்டா ?

உண்டாயின்.அவ்வாறான எதிர்பார்ப்பு உள்ளவர்கள் பின்வரும் கேள்விகளுக்கு ஜேவிபி என்ன பதில் கூறுகிறது என்பதைக் கேட்டுத் தமிழ் மக்களுக்குக் கூறுவார்களா?

முதலாவது கேள்வி, இலங்கை இனப் பிரச்சினை என்பது இலங்கைத் தீவின் பல் வகைமையை ஏற்றுக் கொள்ள மறுத்ததில் இருந்துதான் தொடங்கியது. இலங்கைத் தீவின் பல்வகைமை எனப்படுவது இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் உண்டு என்பதுதான். இந்த பல்வகைமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாதம் அதாவது பெரிய இனம் ஏனைய சிறிய இனங்களின் தேசிய இருப்பை அழிக்க முற்பட்டமைதான் இனப் பிரச்சினையாகும். எனவே இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? ஆயின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை ஜேவிபி ஏற்றுக் கொள்கின்றதா? இது முதலாவது தொகுதிக் கேள்விகள்.

அனுரகுமார கூறுகிறார் தமிழ் மக்களுக்கு மொழிப் பிரச்சினை, வழிபாட்டுப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டு என்று. உண்டுதான். ஆனால் அவையனைத்தும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைக்குள் அடங்கும். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடைய கூட்டுரிமையைப் பாதுகாக்கும் ஒரு தீர்வை முன் வைத்தால் பிரச்சனை தீர்ந்து விடும். எனவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக் கொள்வதுதான்.இந்த அடிப்படையில் இரண்டாவது தொகுதிக் கேள்விகளைக் கேட்கலாம்.

இனப் பிரச்சினைக்கு ஜேவிபி முன் வைக்கும் தீர்வு என்ன? தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ மஹிந்த கூறுகிறார் 13 பிளஸ் என்று. ரணில் கூறுகிறார் 13 என்று. சஜித் கூறுகிறார் 13 பிளஸ் என்று. இந்த விடயத்தில் ஜேவிபி தமிழ் மக்களுக்கு முன் வைக்கும் தீர்வு என்ன?

ஏனைய பெரிய காட்சிகளை விடத் தன் கை சுத்தம் என்று ஜேவிபி கூறுகின்றது. ஊழலற்ற, முறைகேடுகளற்ற, குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்று வாக்குறுதி அளிக்கின்றது. ஆனால் ஊழலும் முறைகேடும் குடும்ப ஆட்சியும் எங்கிருந்து வந்தன? இலங்கைத் தீவின் ஜனநாயக இதயம் எங்கே தோல்வி அடைந்தது? இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள மறுத்த போதுதான்.அதாவது இனப்பிரச்சினைதான் நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்குமான தாய்ப் பிரச்சனை. அதை ஜேவிபி ஏற்றுக் கொள்கிறதா? ஆயின் அதற்கு அவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? ஏனைய கட்சிகளை விட வித்தியாசமான ஒரு தீர்வை அவர்கள் முன்வைப்பார்களா? அதைப் பகிரங்கமாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூற ஜேவிபி தயாரா?

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் அவர்களுடைய பாரம்பரியத் தாயகம் ஆகிய வடக்கு கிழக்கு இணைப்பை ஜேவிபி ஏற்று கொள்கின்றதா? ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு போட்டு சட்டரீதியாக அந்த இணைப்பை பிரித்தது ஜேவிபிதான். அதற்காக ஜேவிபி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்குமா? அல்லது தான் செய்தது சரி என்றால் அதற்குரிய விளக்கத்தை ஜேவிபி பகிரங்கமாகக் கூறுமா? அதாவது ஜே விபி பகிரங்கமாக பொறுப்புக் கூறுமா?

இவை இரண்டாவது தொகுதி கேள்விகள். மூன்றாவது தொகுதி கேள்விகள் வருமாறு… யுத்த காலத்தில் ஜேவிபி படைத்தரப்புக்கு ஆட்சேர்த்துக் கொடுத்தது. போர் வெற்றிகளைக் கொண்டாடியது.ஆனால் தமிழ் மக்கள் அந்த வெற்றிகளை இனப்படுகொலை என்று வர்ணிக்கின்றார்கள். இது தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடு என்ன? அவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைக்கும் பொறி முறை ஒன்று ஐநாவில் செயற்பட்டு வருகின்றது. போரை ஆதரித்த, போரை வழிநடத்திய அனைவரும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஜேவிபி பொறுப்பு கூறுமா ?

நான்காவது கேள்வி, ஜேவிபியானது அதன் முதலாவது ஆயுதப் போராட்டத்தின்போது புதிதாக இணைக்கும் அங்கத்தவர்களுக்கு நடத்திய அரசியல் வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பில் மலையகத் தமிழர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகள் என்று விவரித்தது. ஜேவிபி இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு தான் காணப்படுகின்றதா? இந்த விடயத்தில் மலையக மக்களுக்கு எதிரான தனது முன்னைய நிலைப்பாட்டுக்காக ஜேவிபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமா?

மேற்படி கேள்விகளுக்கு ஜேவிபியும் ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டும்.

கனடாவிலும் யாழ்ப்பாணத்திலும் அனுரகுமார ஆற்றிய உரைகளில் காணப்படும் கவர்ச்சியான மனித நேய வார்த்தைகளைக் கண்டு மயங்கும் தமிழர்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இனப்பிரச்சினை ஒரு மனிதாபிமான பிரச்சினை அல்ல. மொழி பிரச்சினை வழிபாட்டுப் பிரச்சினை போன்றனவும் உதிரிப் பிரச்சினைகள் அல்ல. அவை யாவும் தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் சம்பந்தப்பட்டவை. கூட்டு உரிமை என்று எப்பொழுது கேட்கலாம் என்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டால்தான். ஆனால் ஜேவிபியும் அதற்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களும் அரசியல் அடர்த்தி மிக்க விடையங்களை மேலோட்டமாகவும் மனிதாபிமான வார்த்தைகளிலும் கதைத்து விட்டுப் போகப் பார்க்கின்றார்கள். அரசியல் விவகாரங்களை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி மிக்க சொற்களின் ஊடாகத்தான் உரையாடலாம். அடர்த்தி குறைந்த சொற்களுக்கு ஊடாக உரையாடுவதே ஓர் அரசியல் தான்; தந்திரம் தான்.

ஜேவிபி வெளிப்படையான அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தைகளில் இனப் பிரச்சினை தொடர்பில் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடினால் தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டி வரலாம். எனவே இனப் பிரச்சினை தொடர்பில் ஜெவிபி தெளிவாகப் பேசாமல் ஆனால் கவர்ச்சியாக மனிதாபிமான நோக்கு நிலையில் இருந்து பேசி வருகிறது. ஜேவிபியில் முன்பு உறுப்பினராக இருந்து அதிலிருந்து விலகிய ஒருவர் எழுதிய நினைவுக் குறிப்பு ஒன்றில் அவர் பின்வரும் பொருள் பட கூறுகிறார். “ராஜபக்சக்கள் வெளிப்படையாகத் தெரியும் இனவாதிகள்.ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் ஓர் இனவாதி “ என்று. இக்கூற்று உண்மையா இல்லையா என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு மட்டுமல்ல ஜேவிபிக்கு வாக்களித்தால் என்ன என்று கேட்கும் தமிழர்களுக்கும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here