ஹமாஸின் அரசியல் தலைவரின் 3 பிள்ளைகளும் 4 பேரக்குழந்தைகளும் பலி!

0
35

ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே தனது மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காசா நகருக்கு அருகிலுள்ள அல்-ஷாதி முகாமில் அவரது மகன்கள் பயணித்த மகிழுந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதா ஹமாஸ் தொடர்புடைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையில் ஹமாஸின் கோரிக்கைகளை இந்த சம்பவம் மாற்றாது என்று ஹனியே கூறினார்.

இவரின் மகன்கள் ஹமாஸின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இஸ்ரேல் இராணுவம் கூறியது.

முஸ்லீம் பண்டிகையான ஈத் பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் வகையில் குடும்ப கொண்டாட்டத்திற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

மூன்று மகன்களான ஹஸேம், அமீர் மற்றும் முஹம்மது ஆகியோர் இஸ்ரேல் காஸாப் போரின் போது களத்திலேயே தங்கியிருந்ததாக ஹனியே அல் ஜசீராவிடம் கூறினார்.

இஸ்ரேலின் கோளைத்தனமான தாக்குதலில் ஹனியேவின் நான்கு பேரக்குழந்தைகளான மோனா, அமல், கலீத் மற்றும் ரஸான் ஆகியோர் கொல்லப்பட்டதாக ஹமாஸின் அறிக்கைகள் கூறியது.

ஹமாஸ் தலைவர் வசிக்கும் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காயமடைந்த பாலஸ்தீனியர்களைப் பார்வையிடச் சென்றபோது தான் இந்தச் செய்தியைக் கேட்டதாக ஹனியே கூறினார்.

பேச்சுவார்த்தைக்கான அழுத்தங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தனது இயக்கம் பதிலை அனுப்பும் முன், எனது மகன்களை குறிவைப்பது ஹமாஸை அதன் நிலைப்பாட்டை மாற்றுவதற்குத் தள்ளும் என்று எதிரி நினைத்தால் அது மாயை என்று அவர் அல் ஜசீராவிடம் கூறினார்.

தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் இறப்பு ஒரு தியாகம் என்று அவர் அழைத்ததன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்தார்.

மத்திய காசா பகுதியில் மூன்று ஹமாஸ் இராணுவப் பிரிவு செயற்பாட்டாளர்களை ஒழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. அவர்கள் இஸ்மாயில் ஹனியேவின் மகன்கள் என்றும் கூறியது. இஸ்ரேலின் அறிக்கைகள் ஹனியேவின் பேரக்குழந்தைகளின் மரணம் பற்றி குறிப்பிடவில்லை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் CIA இன் தலைவர் வில்லியம் பர்ன்ஸை கெய்ரோவில் சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைக்கு அனுப்பியுள்ளார்.

ஹமாஸ் பேச்சுவார்த்தை குறித்து ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படும் சமீபத்திய முன்மொழிவில், இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 900 பாலஸ்தீனியர்களுக்குப் பதில் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here