பிரான்சில் நடைபெற்ற தாம் தீம் தகதிமிதா பரதநாட்டிய நிகழ்வு. பிரான்சில் 76 பிராங்கோ தமிழ்ச்சங்களின் தலைமைக்கட்டமைப்பான தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு நடாத்திய தாம்தீம் தகதிமிதா 2024 நிகழ்வு 07.04.2024 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான ஓன்லோ சுபுவாவில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. நிதர்சன் அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து மாவீரர் பொதுப்படத்திற்கு முல்லைத்தீவு nஐயசிக்குறு ஒலுமடுவில் பகுதியில் சிறீலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஐர் விடுதலையின் சகோதரி அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிதிப் பொறுப்பாளர் திரு. செவ்வேள் அவர்கள், மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர், திருமதி. நி. முகுந்தினி அவர்கள், தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் திரு. சுந்தரவேல் அவர்கள், மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள், கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேலாளர் திருமதி. அ. நகுலேசுவரி அவர்கள், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக செயற்பாட்டாளர் திரு. விசுவநாதன் அவர்கள், வர்த்தக சங்கத்தலைவர் திரு. இ. சிறீதரன் அவர்கள், ரிரிஎன் தொலைக்காட்சி பொறுப்பாளர் திரு. ரூபன் அவர்கள், பிரான்சின் மூத்த கலைஞர் திரு. பரா அவர்கள், ஆகியோர் ஏற்றி வைத்தனர்.வரவேற்புரையை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் ஆற்றியிருந்தார்.
பரதநிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகைதந்த முதுகலைமாணி பரதகலாவித்தகர் திருமதி. ஜெயந்தி யோகலிங்கம் அவர்கள் ( இவர் தாயகத்தில் 1999 இல் ‘ நடனமணி ‘ பட்டத்தை யாழ் இராமநாதன் நுன்கலைப்பீடத்தாலும், வட இலங்கை சங்கீத சபையாலும் , ‘ பரதகலாவித்தகர்’ பட்டத்தை 2000 ஆம் ஆண்டு நுன்கலைமாணி யாழ் இராமநாதன் நுண்கலைபீடமும் 2006 இல் வழங்கியது. யாழ் பல்கலைக்கழகத்தில் நடன ஆசிரியராக 2008 லும், 2010 இல் முதுகலைமாணி பட்டத்தை சென்னை பல்கலைக்கழக த்திலும், யாழ் ஏழாலை முத்தமிழ் மன்றத்தால் ‘ யுககலா பாரதி’ என்னும் பட்டத்தையும், 2012 இல் அதே ஆண்டு ‘ ஞான ஏந்தல்’ என்னும் பட்டத்தையும் உடுவில் பிரதேச சபையாலும் வழங்கியமையும், 2015 ‘ முதுதத்துவமானி M. ph’il என்னும் சிறப்பை யாழ் பல்கலைக்கழகம் வழங்கி மகிமைப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தமிழ்ச்சங்கங்களின் பொருளாளர் திருமதி. நிலானி அவர்களால் மதிப்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து பரதநடன நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. பிரான்சின் முன்னணி நடன ஆசிரியர்களின் நடனக்குழந்தைகள் சிறப்பான நடனத்தை வழங்கியிருந்தனர். புஸ்பாஞ்சலி, வரவேற்பு நடனம், சிவதாண்டவமும், கீர்த்தனை, நடேச கவித்துவம், குமரகவித்துவம், ஜதீஸ்வரம், அம்மா கவித்துவம், கப்தம், சடாற்சர கௌத்துவம், குறவை நடனம், ஓம் சக்தி ஓம் பாடல் அபிநய நடனம், பதம், போன்ற 18 நடனங்கள் நடைபெற்றிருந்தன.
நிகழ்வில் அம் மாநகரத்தின் துணை முதல்வர், மற்றும் அனைத்து வெளிநாட்டு சங்கங்களுக்கு பொறுப்பாக இருக்கும் மாநகர உறுப்பினர் மற்றும் சென்டெனி மற்றும் லாக்கூர்நேவ் மாநகர ஆலோசகர் திருமதி. சுகுணா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் பிரான்சு தேசத்தில் தூரநோக்குடன் மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கம் கொண்டதையும், அதில் நீண்டகாலமாக பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதும், பணியாற்றி வருவது பற்றியும், இனியும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் அது காலத்தின் இன்றைய தேவையென்பதையும் தெரிவித்திருந்தார். எமது தேசத்தின் ஆன்மாவின் எதிர்பார்ப்புக்கு அமைய தமிழ்ச்தேசப்பணிகளில் நடைபோட்டு வருவதையும், அது இன்னும் வீரியம் பெற்று பயணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் நாம் 15 ஆண்டுக்கு முன்னர் இந்த நாட்களில் எவ்வளவு கண்ணீரோடும், வேதனையான கதறல்களுடன் நின்றிருந்தோம் என்றும், தமிழீழ தேசத்தில் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் எமது மக்களை காப்பாற்றுமாறு வீதிவீதியாக உலகமெங்கும் கதறினோம், சர்வதேச நாடுகளிடம் பல்வேறு சனநாயகப்போராட்டதின் ஊடாக போராடினோம் அன்று அதை உலகம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் இனியாவது அழிக்கப்பட்ட தமிழினத்திற்கு நீதியை பெற்றுத் தரவேண்டும். அது வரை அரசியல் ரீதியில் சனநாயக வழியில் போராட வரவேண்டும் என்றும் எதிர் வரும் மே மாதம் 18 ஆம் திகதி ( சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் நீதிக்கான பேரணிக்கு அனைத்து தமிழ்மக்களும் குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்றும் அந்த பணிகளில் செயற்பட்டு வரும் அந்தந்தப்பகுதி பிராங்கோ தமிழ்சங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் பிரான்சில் வாழும் தமிழீழ மக்களின் அரசியல், தாய்மொழி, வாழ்விட மொழிக்கல்வி, கலை, பண்பாடு, கலாசாரம் பேணுதல், விளையாட்டு, மனிதநேயப்பணி, பல்லின மக்களுடனான உறவு பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகளை கொண்டு செல்லும் வகையில் தமிழ்ச்சங்கங்கள் சட்டபூர்வமாக உருவாக்கப்பட்டது என்பதையும் அதனை தொடர்ச்சியாக செய்வதற்கு பிராங்கோ சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும் என்றும் அதனை அந்தந்த பிரதேச மக்கள்தான் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதனைச் நெறிப்படுத்தி செய்து வரும் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் ‘ தகைசால் தமிழர் ‘ என்னும் விருதினை இன்றைய நாளில் வழங்கி மதிப்பளிப்பு செய்யப்படுகின்றது. அதனை அவர்களுக்கு செய்யும் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் இதனால் பெருமனநிறைவடைகின்றது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்சங்கக் கூட்டமைப்பின் உப தலைவர் திரு. அமுதன் அவர்களும் உரையை ஆற்றியிருந்தார். அவரும் தமிழ்ச்சங்கங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்தாலும் இன்னும் பல மக்களை உள்வாங்கி பயணிக்க வேண்டும் என்றும் பிரான்சில் 76 தமிழ்ச்சங்கங்கள் உருவாகியுள்ளதையும், இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்றும், அவர்களின் பணி இனிவரும் காலங்களில் அரசியல் ரீதியாக தமிழ்மக்களின் குரலுக்கு வலிமை சேர்க்குமாறு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பிராங்கோ தமிழ்ச்சங்கத்தலைவர்கள் ‘ தகைசார் தமிழர்’ என்னும் விருது வழங்கி மதிப்பளிப்பு செய்யப்பட்டனர். அந்த மதிப்பளிப்பினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளர் திரு. ம. ராசன் அவர்கள் செய்திருந்தார். இன்றைய தகதிமி தா நிகழ்வில் அழைப்பை ஏற்று நடனங்களை வழங்கிச்சிறப்பித்த நடன ஆசிரியர்களை நிகழ்வின் சிறப்பு விருந்தினர் முதுகலைமாணி, பரதகலாவித்தகர். திருமதி. ஜெயந்தி யோகலிங்கம் அவர்கள் வழங்கி மதிப்பளிப்பு செய்திருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கட்டமைப்புப் பொறுப்பாளர்களும், தமிழ்ச்சங்க உறுப்பினர்களும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம், மற்றும் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர், மற்றும் மாநகர ஆலோசகர் ஆகியோரால் பங்குபற்றி நடனங்களை சிறப்பாக வழங்கிய நடன மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பதக்கங்களும், பங்கு பற்றியமைக்கான சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. இறுதி நிகழ்வாக நல்வாய்ப்பு சீட்டு குலுக்கப்பட்டு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நன்றியுரையை தமிழ்ச்சங்கக்கூட்டமைப்பின் அரசியல் செயற்பாட்டாளர் செல்வன் நிதிபன் அவர்கள் வழங்கியிருந்தார்.
நம்புங்கள் தமிழீழ பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் பரதநிகழ்வு நிறைவுபெற்றது.