அல்-ஷிஃபா மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது 50க்கும் மேற்பட்ட போராளிகளை கொன்றதாகவும், மருத்துவ வளாகத்தில் ஆயுதங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை கண்டுபிடித்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகவலை ஹமாஸ் அமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. மருத்துவமனையில் எந்தப் போராளிளும் இல்லை என்றும் அது ஒரு தளமாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
அத்துடன் இஸ்ரேலிய இராணுவம் மத்திய காசாவில் துல்லியமான வான்வழித் தாக்குதலில் 20 போராளிகளைக் கொன்றதாகக் கூறியது. எனினும் சரியான இடத்தைக் குறிப்பிடவில்லை. கடந்த 24 மணி நேரத்திற்குள் பாலஸ்தீனியப் பகுதியில் 100க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் படைகள் கொன்று குவித்துள்ளன.
மேற்குக் கரையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேலியப் படைகள் 25 பாலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் நேற்று மாலை தொடங்கிய சோதனையில் 25 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளதாக பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் அக்டோபர் 7ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,725 ஆக உயர்ந்துள்ளது. ஹெப்ரோன், ரமல்லா, நப்லஸ் மற்றும் பெத்லஹேம் கவர்னரேட்டுகளிலும் இக்கைதுகள் நடந்தன.