வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற வழிபாட்டில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் எதிர்ப்பு போராட்ட பேரணியொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப் போராட்டமானது இன்று காலை நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்து சிங்கள பொலிஸ் நிலையம் நோக்கி சென்றுகொண்டுள்ளது
அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ வெடுக்குநாறி மலையில் எழுந்தருளியிருக்கும் எங்கள் சிவனின் சாபத்திற்கு ஆளாகாதீர், சிவ வழிபாட்டில் இருந்தவரை எதற்காக கைது செய்தாய் , வெடுக்குநாறிமலை தமிழர் சொத்து, பொலிஸ் அராஜகம் ஒழிக , நெடுங்கேணி பொலிஸாரே பொய் வழக்குகளை மீளப்பெறு உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு
வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்து கொண்ட மக்களில் 8பேரை சிறிலங்கா பொலிசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யாது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவரும் நிலையில் , கைது செய்யப்பட்டவர்கள் உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.ஆனால் சிறைச்சாலையில் அப்படி உணவுத்தவிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை என உண்மைக்குப் புறம்பாக சிங்கள அரசாங்கம் தகவல்களை வெளியிட்டு வருகிறது.