ஒட்டாவாவில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் ஒரே வீட்டுக்குள் படுகொலை!

0
127

கனடாவின் ஒட்டாவா நகரில் இலங்கையர்களான நான்கு சிறு குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் வீடு ஒன்றில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என்றும், கொல்லப்பட்ட குழந்தைகளில் ஒன்று மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையது என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது மாணவன் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“இது முற்றிலும் அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அர்த்தமற்ற வன்முறைச் செயல்” என்று ஒட்டாவா காவல்துறைத் தலைவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 22:52 மணிக்கு (03:52 GMT) விடுக்கப்பட்ட அவசர அழைப்பை அடுத்து விரைந்து சென்ற அதிகாரிகள் சந்தேக நபரை விரைவாக அடையாளம் கண்டுகொண்டனர், அவர் எந்தச் சம்பவமும் இல்லாமல் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்தனர், அதில் ஒரு தாய், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்த ஒரு அறிமுகமானவர் ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்தவர்கள், 35 வயதான தர்ஷனி பண்டாநாயக்க கம வல்வே தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான, ஏழு வயது இனுகா விக்ரமசிங்க, நான்கு வயது அஷ்வினி விக்ரமசிங்க, இரண்டு வயது றின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாதமுடைய கெல்லி விக்கிரமசிங்க. மற்றும் இவர்களுக்கு அறிமுகமான 40 வயதான அமரகோன் முதியான்சலாகே காமினி அமரகோன் என அடையாளம் காணப்பட்டார்.

குடும்பத்தின் தந்தை காயமடைந்துள்ளதாகவும், தீவிரமான ஆனால் நிலையான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தலைமை பொலிஸ் அதிகாரி கூறினார்.

சந்தேக நபர் 19 வயதுடைய பெப்ரியோ டி-சொய்சா என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீது 6 முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“கூரிய ஆயுதத்தை” பயன்படுத்தி இந்தக் கொலைகள் இடம்பெற்றுள்ளன.

ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் இந்த சம்பவம் மிகப்பெரிய கொலை வழக்கு என்று பொலிஸ் அதிகாரி கூறினார்.

இது சமூகத்தின் மீதான தாக்கம் அதிகம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறிய அவர், குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் தொடர்ந்து அப்பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இது “பயங்கரமான வன்முறை” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here