உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழீழப் பெண்கள்!

0
85

மார்ச் -08. இன்று உலக மகளிர் நாள். புரட்சி கொண்ட பெண்கள் தமக்கான நீதியைப் போராடிப் பெற்றுக் கொண்ட நாள். ஆணாதிக்க சமூகத்துக்கு எதிராக சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான சம உரிமைகளை நீண்ட ஓயாத போராட்டங்களின் மூலம் வென்றெடுத்த நாள்.

இந்த நாளில் உலகப் பெண்கள் அனைவரும் அறிவியலில்  வியக்கத்தகு சாதனைகளையும், புரட்சியில் வெற்றியின் சிகரங்களையும்   நோக்கி வெற்றிப்பாதையில் வீறுநடைபோட தமிழீழப் பெண்கள் தமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஓர் இன ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

சிறிலங்கா அரச படைகள் தமிழ் பெண்கள் மீது காலத்துக்குக் காலம் இன அடக்குமுறையை திணித்து வந்து கொண்டிருக்கின்றது. தனிச் சிங்களச் சட்டத்தின் பின் பெண்களின் மார்பிலும் முதுகிலும் சிங்கள சிறி எழுத்தை கட்டாயப்படுத்தி பொறித்தது. சுற்றி வளைப்புத் தேடுதல் என்ற பெயரில் தமிழ் பெண்கள் தம் உயிரிலும் மேலாய் நேசிக்கும் மானத்தைச் சூறையாடியது. சித்திரவதை முகாம்களில் பல பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். போரின் போது பணயக்கைதிகளாக பாவிக்கப்பட்டு பல வலிகளையும் வதைகளையும் எதிர்கொண்டார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெறத் தொடங்கிய நேரத்தில் பெண்விடுதலை இல்லாமல் மண்விடுதலை சாத்தியமாகாது. 

பெண்கள் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் சம நேரத்தில், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராவும் போராட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த தேசியத் தலைவர் அவர்கள், தங்கைகளால் முடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கான வழிசமைத்துக் கொடுத்தார். 

உலகமெங்கும் பெண்கள் தமக்கான அங்கீகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்க, தமிழீழப் பெண்கள் அதையும் தாண்டி, சமூகம் என்ற வேலியைக் கடந்து, மிக குறுகிய காலத்துக்குள்ளே மாபெரும் புரட்சியைப் படைக்கத் தொடங்கியிருந்தனர்.

போரியலில், அறிவியலில் ,தொழில்நுட்பத்தில், ஊடகங்களில், அரசியலில், நிர்வாகத்தில்,  ஆளுமையில், தலைமைத்துவத்தில் ,பாதுகாப்பில் என்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் நட்சத்திரங்களாய் மிளிர்ந்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக தம் இனத்தினுடைய விடுதலைக்காக தங்கள் உயிர்களைக் கொடுத்துப் போராடும் வல்லமை மிக்கவர்களாக பெண்கள் திகழ்ந்தார்கள். 

மனஉறுதியில்,விடாமுயற்சியில்,கொண்ட இலட்சியத்தை அடையும் திறனில் பெண்களுக்கு நிகர் யாருமே இல்லை என்பதை தங்கள் செயல்கள் மூலம் நிரூபித்துக் காட்டியவர்கள் தமிழீழப் பெண்கள்.

இந்திய வல்லாதிக்கப் படைகள் அமைதிப்படைகளாய் எம்மண்ணில் கால்பதித்து,  பின்னர் தமிழ்மக்கள் மீது தம் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கியபோது இந்தியப் படையினரோடு முதல் முதலாக கோப்பாய் வெளியில் போரரங்கைத் தொடக்கி அந்தக் களத்தில் தன்உயிரை  அர்பணித்தவள் இரண்டாம் லெப்டினன் மாலதி. அவள் தொடக்கி வைத்த விடுதலை வேள்வியில் பெண்கள் ஆயிரமாயிரமாய் அணிவகுத்தனர்.

தரையில் மட்டுமல்ல கடலிலும் பெண்கள் கால்பதிக்கத் தொடங்கினர்.கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கன்னி நீரின் அடியால் நீண்ட தூரம் நீந்திச் சென்று பகைக்கலம் அழித்து பெண்ணின் பேராற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டி ஈகத்திலும், தற்கொடை உணர்விலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக் காட்டியவள். அவள் காட்டிய பாதையில் கடலிலும், தரையிலுமாய் தம்முன் இருந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து விழிநிமிர்த்திப் பார்க்கும் வீர வரலாறுகளை படைத்தவர்கள் தமிழீழப் பெண்கள். 

தமிழீழத் தாய்  அன்னை பூபதி  பசித்திருந்து அறவழியில் போர்தொடுத்து, எம்மண்ணில் தலைவிரித்தாடிய அடக்குமுறைகளை எதிர்த்து நின்றவர். நாளும் மெழுகாய் உருகியுருகி சுருண்டு அணைந்தபோதும் அகிலமே வாய்மூடி வேடிக்கை பார்த்தது. ஆனால், கொண்ட இலட்சியத்தில் தளர்ந்திடாத அன்னை இன்று நாட்டுப்பற்றின் அடையாளமாய் தமிழீழ வரலாற்றில் தலைநிமிர்ந்து நிற்கின்றார்.

தமிழ்மக்களின் விடுதலைக்கான எமது ஆயுதப் போராட்டம் வேர்விட்டு, விழுதெறிந்து, நிழல்பரப்பி  இருந்த அந்த நாட்களில் தனித்து ஒருபெண் எந்தவேளையிலும் நடமாடும் துணிவும்,அச்சமில்லாச் சூழலும், பாதுகாப்பு உணர்வும் மிக்கவர்களாக இருந்தார்கள். அதுஒரு பொற்காலமாகவே இருந்தது.

எல்லோரும் எழுத்துகளில் மட்டும் கண்ட பெண்விடுதலையை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டி தங்கைகளால் முடியும் என்பதை உலகிற்கு உணர்த்திக் காட்டியவர் எங்களினுடைய தேசியத் தலைவர் அவர்கள்.

பெண்களே எதிர்கால சந்ததியை உருவாக்கும் பெரும் சக்திகள் என்பதால் பெண்களை இலக்குவைத்தே பல இனப் படுகொலைகள் நடந்தேறியிருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செஞ்சோலை வளாகத்தில் கூடியிருந்த பள்ளி மாணவிகள் மீது சிறிலங்கா அரச படைகளால் திட்டமிட்டு   நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான வான்தாக்குதலைக் குறிப்பிடலாம். இதில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 155க்கும் மேற்பட்ட மாணவிகள் விழுப்புண்களைத் தாங்கினர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக 2009 மே 17 முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்தேறிய 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடிய மனித படுகொலை வரை பெண்களே நேரடியாகவும் மறைமுகமாகவும்  பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இறுதிப்போரில் பலபெண்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் கொடும் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்யப்பட்ட ஆதாரங்கள் பல வெளியாகி இருக்கின்றது. இதைவிட இறுதிப்போரின் போது சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த காணாமல் ஆக்கப்பட்ட பெண்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவில்லை. போரிற்குப்பின்னர் வடக்குக் கிழக்கில் மட்டும் 90 000 ஆயிரம் விதவைகள் பெரும் பொருளாதார சுமைக்குள் திண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்றும் தொடர்ந்து அடக்குமுறைக்குள்ளே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்நிலையில் இறுதிக்கட்டப் போரை வழிப்படுத்திய போர்குற்றவாளியே இன்று சிறிலங்காவின் ஐனாதிபதியாக  இருக்கிறார்.

ஆனால் இதுவரை பன்னாட்டுச் சமூகம் எம் விடயத்தில் பாராமுகத்தோடு இருப்பது பெரும் வேதனையைத் தருகின்றது.உலகில் எந்த மூலையில் போர்நடந்தாலும் அந்த போரைத் தடுத்து, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்து, போர்மீறல்களை எல்லாம் சர்வதேச விசாரணைக்கு எடுத்து நீதி வளங்கும் ஐ.நா விடம் எமக்கான நீதி வேண்டி உங்களின் குரல்களும் எங்களுக்காய் ஓங்கி ஒலிக்கட்டும்.

பெண்மையைப் போற்றுகின்ற தாய்மையை மதிக்கின்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலில் நிமிர்வோடு வாழ்ந்த எங்கள் பெண்கள் 2009.05.17 தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது ஆயுதப்போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டு வந்த பின்னர் கேட்க யாருமற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மீதான வன்கொடுமைகள் மீண்டும் தலைதூக்கி இருக்கின்றன. 

எனவே,இவர்களுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய சூழலில்தான் இன்றைய மகளிர்நாள் புலர்ந்திருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here