இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை பேரணியாகச் சென்றனர். இதன்போது இந்தியத் துணைத் தூதரகத்துக்குச் செல்லும் வழியில் பொலிஸார் இடைமறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூதரகம் முன்பாகப் பேரணியைச் செல்லவிடாது வரியல் போட்டு பொலிஸார் இடைமறித்ததுடன் மீனவ அமைப்புக்களின் எட்டு பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கினர்.
இதற்கமைய தூதரகத்துக்குள் சென்ற பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
இந்தநிலையில், பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டக்காரர்கள், “இலங்கை மீனவர்களின் கடல் வளத்தை அழிக்காதே”, “தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்து”, “எமது கடல் வளப் பாதுகாப்பை உறுதி செய்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை – இந்திய அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.