பிரான்சில், குறிப்பிட்ட பாலாடைக்கட்டி அல்லது சீஸில் இருந்த நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.
பிரான்சில், காய்ச்சப்படாத பாலிலிருந்து எடுக்கப்பட்ட சீஸ் அல்லது பாலாடைக்கட்டியை உட்கொண்ட குழந்தைகள், சிறார் சிறுமிகள் சிலர், hemolytic uremic syndrome (HUS) என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த HUS என்னும் பிரச்சினை, சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கக்கூடியதாகும்.
இந்த HUS என்னும் பிரச்சினை, ஈ கோலை என்னும் நோக்கிருமியுடன் தொடர்புடையது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்கொண்ட சீஸில் இந்த ஈ கோலை கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், அந்தக் குழந்தைகளின் மலத்தைப் பரிசோதித்தபோது, அதிலும் அந்த குறிப்பிட்ட கிருமிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காய்ச்சப்படாத பாலிலிருந்து தயாரிக்கப்படும் சீஸ் அல்லது பாலாடைக்கட்டியில்தான் இந்த கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, குழந்தைகள், குறிப்பாக ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்திக் குறைபாடு கொண்டவர்கள் அவ்வகை சீஸை உண்ணவேண்டாமென பிரான்ஸ் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.