அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடந்து 3 நாளாகியும் பதிலடி கொடுக்க விடாமல் தடுப்பது எது ?

0
115

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இரான் ஆதரவு போராளிக் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. டவர் 22 என்று அழைக்கப்படும் தளத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது 34 பேர் காயமடைந்தனர். இதற்கு பின்னால் இருப்பது இரான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

மேலும், “அதிக விளைவுகளை ஏற்படுத்தும் பதிலடி ” கொடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தது.ஆனால் இரான் இந்த குற்றச்சாட்டு “ஆதாரமற்றது” என்றும், “எதிர்ப்பு குழுக்களின் முடிவுகளில் இரானுக்கு எந்த தொடர்புமில்லை “ என்றும் கூறியது.

அமெரிக்க அதிகாரிகள் பல வாரங்களாக இந்த பிராந்தியத்தில் பல முனைகளில் நிலவும் பதட்டங்கள் பெரிய போராக மாறுவதை தடுக்க முயன்றுள்ளனர்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பின்னர் அப்பிராந்தியத்தில் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

‘டவர் 22’ ராணுவ தளம் எங்கே இருக்கிறது?

சிரிய எல்லைக்கு அருகே வடகிழக்கு ஜோர்டானில் உள்ள டவர் 22 என்று அழைக்கப்படும் அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறுகையில், எதிரி ட்ரோன் “மிகவும் தாழ்வாகவும் மிகவும் மெதுவாகவும்” வந்தது. அதே நேரத்தில் ஒரு அமெரிக்க ட்ரோன் அந்த தளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது. அமெரிக்க ட்ரோனை சுட்டு வீழ்த்தக் கூடாது என்பதற்காக தளத்தின் வான் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கு பாதுகாப்பு கருவிகள் அணைக்கப்பட்டிருந்தன என்று அந்த அதிகாரி கூறினார்.

இதன் விளைவாக, ட்ரோன் வந்தபோது டவர் 22 -ல் இருந்த துருப்புக்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. ஐ.எஸ். அமைப்பை தோற்கடிப்பதற்காக நட்பு நாடுகளுக்கு ஆதரவு அளிப்பது உட்பட முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் சுமார் 350 அமெரிக்க வீரர்கள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில், 8 பேர் உயர்சிகிச்சைக்காக ஜோர்டானில் இருந்து வேறு நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நிலைமை சீராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது?

ஜோர்டானின் வடமேற்கு மூலையில் ஒரு கொடூரமான ட்ரோன் தாக்குதலில் தாக்கப்பட்ட இந்த தளம், இராக், ஜோர்டான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத் தளங்களில் ஒன்றாகும்.

ஜோர்டானில் தாக்கப்பட்ட டவர் 22 போன்ற ராணுவ தளம் முதல் , மேற்கு இராக்கில் உள்ள அல்-அசாத் விமானத்தளம் வரை பல்வேறு வகையிலான ராணுவ தளங்கள் இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினரால் கடந்த சில மாதங்களில் தாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் ஒரு முக்கிய கூட்டாளியான ஜோர்டானில் சுமார் 3,000 அமெரிக்க துருப்புகளும், இராக்கில் 2,500 துருப்புகளும் உள்ளன. இராக்கில் ஐ.எஸ். குழு மீண்டும் வளர்வதை தடுப்பதற்காக இராக்கிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அமெரிக்க படைகள் அங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஐ.எஸ். குழு, 2017 -ல் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னும் அங்கு உள்ளனர்.

சிரியாவில் பகுதியளவு தன்னாட்சி பெற்ற வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஐ.எஸ் எதிர்ப்பு கூட்டாளியான குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கு ஆதரவாக சுமார் 900 அமெரிக்க வீரர்கள் சிரியாவில் உள்ளனர். சிரிய அரசாங்கம் தனது நாட்டில் அமெரிக்கா இருப்பதை எதிர்க்கிறது. அதை ஒரு ஆக்கிரமிப்பு என்று அழைக்கிறது.

மத்திய கிழக்கில், வளைகுடாவில் மூன்று முக்கிய விமானத் தளங்கள், பஹ்ரைனில் ஒரு துறைமுகம் உட்பட பல தளங்களை கொண்டுள்ளது அமெரிக்கா. இது அமெரிக்க கடற்படைப் படைகள் மற்றும் அமெரிக்க ஐந்தாம் கடற்படையின் தலைமையகமாக உள்ளது.

இராக்கில் உள்ள ‘இஸ்லாமிய எதிர்ப்பு’ (Islamic Resistance) இயக்கம் என்பது என்ன?

இராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியது. சிரியாவிலும், ஜோர்டானிலும் உள்ள ஷடாடி, ருக்பான் மற்றும் தான்ப் ஆகிய மூன்று அமெரிக்க தளங்களையும், மத்தியதரைக் கடலில் உள்ள இஸ்ரேலிய எண்ணெய் நிலையத்தையும் குறி வைத்ததாக அது கூறியது.

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக காஸாவில் இஸ்ரேலின் குண்டுவீச்சு தொடங்கிய பிறகு, 2023 -ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த குழு உருவானது. இது இராக்கில் செயல்படும் இரான் ஆதரவு பெற்ற போராளிகளைக் கொண்டுள்ளது. சமீப காலங்களில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான பிற தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுள்ளது.

“இராக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு” என்பது இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்கும் நீண்ட வரலாற்றைக் கொண்ட கதாயிப் ஹெஸ்பொல்லா, நுஜாபா மற்றும் கதாயிப் சையத் அல்-ஷுஹாதா போன்ற பல்வேறு ஷியா போராளிக் குழுக்களுக்களை ஒட்டுமொத்தமாக குறிக்கும் சொல் ஆகும். இரான் தனது ஆதரவு மற்றும் கூட்டணி குழுக்களை “எதிர்ப்பின் அச்சு” என்று குறிப்பிடுகிறது. இது அதன் எதிரிகளுக்கு எதிரான ஒரு வகையான பாதுகாப்பு அமைப்பாகும். இதனால், அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட குற்றவாளி மீது தாக்குதல்களை நடத்துவதை கடினமாகிறது. இதுவே, இந்த குழுக்களை உருவாக்கியதற்கான நோக்கமாகும்.

தாக்குதல் நடந்து 3 நாளாகியும் பதிலடி கொடுக்க விடாமல் தடுப்பது எது?

ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலை “வெறுக்கத்தக்க, முற்றிலும் நியாயமற்ற” தாக்குதல்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். “தீவிர இரான் ஆதரவு குழுக்களால்” இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“உரிய நேரத்திலும் முறையிலும் இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கும் பதிலடி கொடுக்கப்படும்.” என்றும் அவர் உறுதியாக கூறினார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளும் இரான் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.

எனவே இந்த தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டிய அழுத்தம் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என அனைவரது பார்வையும் அமெரிக்கா மீதே உள்ளது. எப்படி பதிலடி கொடுப்பது, யாரை அடிப்பது, எங்கு அடிப்பது என்பதுதான் தற்போது பைடனின் குழப்பம். அமெரிக்காவால் கடுமையாக திருப்பித் தாக்குவதன் மூலம் தாக்குதல்களைத் தடுக்க முடியுமா அல்லது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வளர்ந்து வரும் மோதல்கள் தீவிரமடையுமா என்பது தான் கேள்வி.

மத்திய கிழக்கிற்கான முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சரான மிக் முல்ராய் பிபிசியிடம் கூறுகையில், “இன்றுவரை நாங்கள் பயன்படுத்தியதை விட அதிக பலத்துடன்” பதிலடி கொடுக்க வேண்டும் என்று தான் நம்புவதாக கூறினார்.

“காஸாவில் நடைபெறும் போர் அந்த பிராந்தியம் முழுவதும் விரிவடைவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. இரான் அதை விரிவுபடுத்த விரும்புகிறது என்பதும் தெளிவாக தெரிகிறது. ” என்று அவர் கூறினார்.

“அவர்களுக்கு புரியும் ஒரே மொழி வலிமை. அதைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.” பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இரானை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here