இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைய தமிழர், தாம் உயிர் வாழ்வதற்குரிய உணவினை உற்பத்தி செய்வதற்குத் தேவையான மழையையும் வெயிலையும் வழங்கிய இயற்கைக்கும் கதிரவனுக்கும் உயிரினங்களுக்கும் நன்றி தெரிவித்துப் போற்றிய திருநாளே தைப்பொங்கல். காலங்காலமாக இத்திருநாள் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இத்திருநாள் தமிழரின் மரபுவழிப் பண்பாட்டின் அடையாளமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளினை சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் இல்லம் ஆகியவை இணைந்து 20.01.2024 சனி அன்று பேர்ண் மாநிலத்தில் மிகச் சிறப்பாக நடாத்தியது. மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் பொங்கல் பொங்குதல், பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல், நிகழ்வுச்சுடரேற்றல், அகவணக்கம் ஆகியவை இடம்பெற்று கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின.
விழாவில் இளையோரின் இசைக்கருவி இசை, எழுச்சி நடனங்கள், எழுச்சிப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள், மேற்கத்தேய நடனங்கள், கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. கலைநிகழ்வுகளைச் சுவிஸ் நாட்டில் கலைத்துறையில் வளர்ந்துவரும் இளங்கலைஞர்கள் வழங்கியிருந்தமை எல்லோராலும் பாராட்டப்பெற்றன. தமிழர் என்ற நிமிர்வோடு அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடிய தமிழர் திருநாள் நிகழ்வானது தாரக மந்திரத்துடன் நிறைவெய்தியது.
தமிழர் திருநாள் 2024 சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய ஆதரவாளர்கள், நிதி அனுசரணையாளர்கள், இன உணர்;வாளர்கள், இளையோர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.